விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி
x
தினத்தந்தி 13 April 2021 4:37 PM GMT (Updated: 13 April 2021 4:37 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

விழுப்புரம், 

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று மீண்டும் பரவ தொடங்கி இருப்பதால் பல்வேறு கட்பாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் வழிபாட்டு தலங்களிலும் கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் ஒரு பகுதியாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கோவில்களில் இம்மாதம் நடைபெற இருந்த சித்திரை திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் விழுப்புரம் திரு.வி.க. வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில், திண்டிவனம், செஞ்சியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் சித்திரை திருவிழாவையொட்டி நடைபெற இருந்த லட்ச தீப திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் நடைபெற இருந்த சித்திரை திருவிழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபோல் விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள பல்வேறு கோவில்களில் நடைபெற இருந்த திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் இன்று (புதன்கிழமை) தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும், இதில் தரிசனத்துக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வருவார்கள்.அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலனை கருதியும், கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் விதமாகவும் கோவில்களை சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

 விழுப்புரம்- கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 2,108 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களை சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடந்து வருகிறது.  பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து வருதல் வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்றியே சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று அறநிலைய துறையினா் தொிவித்தனா்.

Next Story