வேகமாக பரவும் கொரோனா: வீடு, வீடாக மருத்துவ குழுவினர் தீவிர கண்காணிப்பு


வேகமாக பரவும் கொரோனா: வீடு, வீடாக மருத்துவ குழுவினர் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 13 April 2021 10:18 PM IST (Updated: 13 April 2021 10:18 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க வீடு, வீடாக மருத்துவ குழுவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விழுப்புரம், 


தமிழகத்தில் தற்போது  வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றை முழுமையாக தடுக்க காய்ச்சல் முகாம்களை தொடர்ந்து நடத்தவும், வீடு, வீடாக சென்று காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்களை தினந்தோறும் கண்காணிக்கவும், நோய் தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தகுந்த பரிசோதனை மேற்கொள்ளவும் சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் சுகாதாரத்துறையினர் காய்ச்சல் முகாம்களை நடத்தி வருகின்றனர்.


அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

அதன்படி தற்போது விழுப்புரம், திண்டிவனம் நகராட்சி பகுதிகளில் தினந்தோறும் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 

இதுதவிர பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளிலும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு அம்முகாம்களில் அங்கேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுவதோடு கொரோனா தடுப்பூசியும் போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வீடு, வீடாக கண்காணிப்பு

மேலும் வீடு, வீடாக சென்று காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களை தினந்தோறும் கண்காணிக்கும் பணிக்காக அமைக்கப்பட்ட 2 செவிலியர்கள், 2 ஊழியர்கள் என 4 பேர் அடங்கிய குழுவினர் அனைத்து வீடுகளுக்கும் சென்று காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களை கண்காணித்து உரிய ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

 அதுபோல்  தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் அந்த குழுவினர் கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை செய்யும் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர்.

 இவர்களை தவிர அங்கன்வாடி ஊழியர்களும் வீடு, வீடாக சென்று காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்களை கண்டறிந்து வருகின்றனர்.
இவர்களில் ஒவ்வொருவருக்கும் 50 பேரை கண்காணித்து உரிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

அதன்படி இந்த குழுவினர் தற்போது ஒவ்வொரு வீடு, வீடாக சென்று அங்குள்ளவர்களை பரிசோதனை செய்து வருகின்றனர். விழுப்புரம் மகாராஜபுரம் பகுதியில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார் அறிவுரைப்படி நகர்நல அலுவலர் பாலசுப்பிரமணியன், அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் ஜோதி, நிஷாந்த் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் வீடு, வீடாக சென்று கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

உரிய சிகிச்சை பெற ஏற்பாடு

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த கண்காணிப்பின் போது யாருக்கேனும் கொரோனா தொற்றுக்கான அறிகுறி இருந்தால் உடனே அவர்களை வீட்டு தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை செய்யப்படும். இதன் பரிசோதனை முடிவில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து உரிய சிகிச்சை பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றனர்.

Next Story