பொதுமக்களிடம் போலீசார் மென்மையான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும்
பொதுமக்களிடம் போலீசார் மென்மையான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும்
கோவை
பொதுமக்களிடம் போலீசார் மென்மையான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும் என்றும், அத்துமீறக்கூடாது என்றும் போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் அறிவுறுத்தி உள்ளார்.
கோவை காட்டூர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் இரவு 10.21 மணிக்கு உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்த பெண்கள் உள்பட 4 பேரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்து என்பவர் தடியால் தாக்கினார்.
இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முத்துவை பணியிடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் குனியமுத்தூர் பகுதியிலும் ஒரு பேக்கரி கடைக்குள் புகுந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாக்குதல் நடத்திய வீடியோ காட்சியும் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த சம்பவங்கள் குறித்து போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் நிருபர்கள் கேட்டபோது அவர் கூறியதாவது:-
மென்மையான அணுகுமுறை
பொது மக்களிடம் மென்மையான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும் என்று சட்டம்- ஒழுங்கு, குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சாதாரண விதிமீறல்கள் என்றால் போலீசார் வழக்குப் பதிவு செய்யலாம். தகாத வார்த்தையால் பேசுவது, தடிகளால் தாக்குவது போன்ற சம்பவங்க ளில் ஈடுபட கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
சட்டம் ஒழுங்கு பிரச்சினை, குற்றத் தடுப்பு விவகாரங்களில் போலீசாரின் நடவடிக்கையை உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
கடும் நடவடிக்கை
பொதுமக்களிடம் அத்துமீறி நடந்து கொள்ளும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக அனைத்து போலீசாருக்கும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.
பணிச்சுமை அதிகரித்து உள்ளதால் போலீசார் ஒருவித மனஅழுத்தம் ஏற்பட்டு இது போன்ற தாக்குதலில் ஈடுபட கூடிய நிலையும் இருக்கிறது.
எனவே பணியை பகிர்ந்து கொடுத்து சட்டம் -ஒழுங்கு, குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறினார்.
வருத்தம் தெரிவித்தார்
காட்டூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் புகுந்து தாக்கிய ஓட்டல் உரிமையாளர் மோகன்ராஜை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்து, நடந்த சம்பவத்திற்கு போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் வருத்தம் தெரிவித்தார்.
குனியமுத்தூர் பகுதியில் நடைபெற்ற சம்பவம் குறித்து கேட்ட போது, அது தொடர்பாக புகார் எதுவும் வரவில்லை. ஆனாலும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது என்று போலீஸ் கமிஷனர் கூறினார்.
Related Tags :
Next Story