வேலூர் அருகே நடந்த தொழிலாளி கொலை வழக்கில் ஆட்டோ டிரைவர் பிடிபட்டது எப்படி?சுவாரசிய தகவல்கள்.


வேலூர் அருகே நடந்த தொழிலாளி கொலை வழக்கில் ஆட்டோ டிரைவர் பிடிபட்டது எப்படி?சுவாரசிய தகவல்கள்.
x
தினத்தந்தி 13 April 2021 11:32 PM IST (Updated: 13 April 2021 11:32 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் அருகே நடந்த தொழிலாளி கொலை வழக்கில் ஆட்டோ டிரைவர் பிடிபட்டது எப்படி என்பது குறித்து சுவாரசியமான தகவல்கள் கிடைத்துள்ளது.

வேலூர்

தொழிலாளி கொலை

வேலூர் கஸ்பாவை சேர்ந்த ராஜா (வயது 34) என்ற கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் ராஜாவின் தங்கையின் கணவரான ஆட்டோ டிரைவர் குமாரை (37) போலீசார் கைது செய்தனர்.
ராஜாவின் தாயார் அரசு பணியின் போது இறந்ததால் அதற்குரிய பண பலன் ரூ.6 லட்சம் மற்றும் அவரின் அரசுப்பணி ராஜாவின் தங்கை உஷாவிற்கு கிடைக்கும் என ஆசைப்பட்டு, அதற்கு இடையூறாக இருக்கும் ராஜாவை கொலை செய்தது தெரியவந்தது.

குமார் பிடிபட்டது எப்படி என்பது குறித்து போலீசார் கூறியதாவது:-

ராஜாவின் பிணம் கைப்பற்றப்பட்டபோது, அந்த பகுதியில் குமார் நின்றிருந்தார். இறந்தவர் யார்? என விசாரணை மேற்கொண்டிருந்த வேளையில், ராஜாவின்  குடும்பத்தினர் வந்து ராஜாவின் உடலை பார்த்தனர். ஆனால் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டதால், அது ராஜா இல்லை என அவர்கள் தெரிவித்தனர். 
ஆனால் குமார் மட்டும், இறந்தது ராஜா தான் என ஆணித்தரமாக கூறினார். எனவே அவர் மீது எங்களுக்கு சந்தேகம் எழுந்தது. 

போலீசாருக்கு உதவிய குற்றவாளி

மேலும் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதில் அவர் அதிக ஆர்வம் காட்டினார். இதுவும் எங்களுக்கு ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இறந்தவர்  ராஜா தான் என உறுதி செய்தபோது தான் ராஜாவுக்கும், குமாருக்கும் பணம் தொடர்பாக பிரச்சினை இருந்தது தெரியவந்தது. எனவே குமார் தான், ராஜாவை கொலை செய்திருப்பார் என தீர்மானித்தோம்.

அதைத்தொடர்ந்து அவரை பிடித்து விசாரணை நடத்தியபோது கொலையை அவர் ஒப்புக்கொண்டார். ராஜாவை கொலை செய்து, கிணற்றில் போட்டு விட்டு சென்ற பின்னர் அடிக்கடி வந்து கிணற்றை அவர் பார்த்துள்ளார். ஏனெனில் ராஜா இறந்துவிட்டார் என்று மற்றவர்கள் நம்பினால் தான், அவரது மாமியாருக்கு வரவேண்டிய ரூ.6 லட்சம் பணம், ராஜாவின் தங்கைக்கு அதாவது குமாரின் மனைவி உஷாவுக்கு வேலை கிடைக்கும். எனவே அவர் இறந்தது எல்லாருக்கும் தெரியவேண்டும் என அவர் அடிக்கடி கிணற்றின் அருகே வந்து பார்த்து விட்டு சென்றுள்ளார். பிணம் தண்ணீரில் மிதந்ததை அவர் பார்த்து, பொதுமக்கள் போல் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க அவர் உதவியதற்கான காரணமும் எங்களுக்கு தெரியவந்தது. அவை எதற்கு எனில், ராஜாவை கொலை செய்திருக்கும் போது, உடலில் தடயங்கள் ஏதேனும் இருந்தால், உதவி செய்வதுபோல் அந்த தடயங்களை அழித்துவிடாலாம் என்று நினைத்து போலீசாருக்கு உதவி செய்துள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story