மங்களாம்பட்டியில் மீன்பிடி திருவிழா
மங்களாம்பட்டியில் மீன்பிடி திருவிழா நடந்தது.
கொட்டாம்பட்டி,ஏப்.
கொட்டாம்பட்டி அருகே மங்களாம்பட்டியில் நேற்று பாரம்பரியம் மிக்க மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இங்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மழை இன்றி கண்மாய், குளங்கள் நிரம்பாமல் இருந்தன. கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையால் நீண்ட வருடங்களுக்கு பிறகு கண்மாய்கள் நிரம்பின. தற்போது கோடை காலம் என்பதாலும், கண்மாய்களில் நீர் வற்றியதாலும் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி மங்களாம்பட்டியில் உள்ள கோனார் கண்மாய் மற்றும் கலுத்தாக்குடி கண்மாய்களில் மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டது. இதில் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு வலை, கச்சா, ஊத்தா உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு நாட்டுவகை மீன்களான விரால், கெண்டை, குரவை, கெழுத்தி உள்ளிட்ட மீன்களை பிடித்து உற்சாகமடைந்தனர். இங்கு பிடிக்கப்பட்ட மீன்களை விற்பனை செய்யாமல் அவரவர் வீடுகளில் சமைத்து உண்ணுவார்கள். நீண்ட வருடங்களுக்கு பிறகு மீன்பிடி திருவிழா நடைபெற்றதால் பொதுமக்களிடையே உற்சாகமும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது.
Related Tags :
Next Story