கூடுதல் கலெக்டர், நகரசபை ஆணையாளருக்கு கொரோனா


கூடுதல் கலெக்டர், நகரசபை ஆணையாளருக்கு கொரோனா
x
தினத்தந்தி 13 April 2021 11:42 PM IST (Updated: 13 April 2021 11:42 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் கூடுதல் கலெக்டர், நகரசபை ஆணையாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் கூடுதல் கலெக்டர், நகரசபை ஆணையாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது."

கொரோனா அதிகரிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் சில நாட்களாக மீண்டும் பரவத்தொடங்கி வருகிறது. ஒற்றை இலக்க எண்ணிக்கையில் இருந்து வந்த நிலையில் கடந்த வாரம் தொடங்கி இரட்டை இலக்க எண்ணிக்கையில் பாதிப்பு உயர்ந்து தற்போது 20 முதல் 30 பேர் வரை நாள்தோறும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மற்ற மாவட்டங்களோடு ஒப்பிடுகையில் கட்டுக்குள்இருந்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது வேகமாக உயர்ந்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அச்சம் ஏற்பட்டாலும் மக்களிடம் கவனக்குறைவு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்காமை போன்றவைதான் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
கடந்தமுறை கிருமிநாசினி கொண்டு அடிக்கடி கைகழுவுதல், முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கைகுலுக்குதல் உள்ளிட்டவைகளை கடைப்பிடித்த மாவட்ட மக்கள் தற்போது கொரோனாவை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறும் வகையில் சர்வசாதாரணமாக நடந்து கொள்வதை காண முடிகிறது. இதன் காரணமாக மாவட்ட நிர்வாகம் சுகாதாரத்துறை, நகராட்சி, காவல்துறை உள்ளிட்டவைகளின் மூலம் முககவசம் அணிவதை கடுமையாக பின்பற்ற அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. இருப்பினும் மக்களிடையே ஒத்துழைப்பு இல்லாத நிலையே நீடித்து வருகிறது. இதன்காரணமாக மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

கூடுதல் கலெக்டருக்கு கொரோனா

இந்நிலையில் ராமநாதபுரம் கூடுதல் கலெக்டர் மற்றும் நகரசபை ஆணையாளர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அவரவர் வீடுகளில் தங்களை தானே தனிமைப்படுத்திக்கொண்டு டாக்டர்களின் அறிவுரைப்படி சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தின் முக்கிய அதிகாரிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஆய்வு கூட்டங்கள், தேர்தல் பணி, கொரோனா தடுப்பு பணி உள்ளிட்டவைகளில் உடன் பணியாற்றிய உயர் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை கலக்கம் அடைந்துள்ளனர். இவர்களில் பலர் தாங்களாகவே தனிமைப்படுத்திக்கொண்டு கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். மாவட்டத்தில் உயர் அதிகாரிகள் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள சம்பவம் மக்களிடையே தற்போது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story