மஞ்சள் நிறத்தில் மாநகராட்சி குடிநீர்
மதுரை நகரில் மாநகராட்சி சார்பில் வினியோகிக்கப்படும் குடிநீர் மஞ்சள் நிறத்தில் துர்நாற்றம் வீசுவதால் அதனை பருகுவதற்கு பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.
மதுரை,ஏப்.14
மதுரை நகரில் மாநகராட்சி சார்பில் வினியோகிக்கப்படும் குடிநீர் மஞ்சள் நிறத்தில் துர்நாற்றம் வீசுவதால் அதனை பருகுவதற்கு பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.
குடிநீர்
மதுரை நகர் பகுதிகளில் மாநகராட்சி சார்பில் வீடுகளுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த குடிநீர் தேவைக்கான நீர் வைகை அணையில் இருந்து பெறப்பட்டு பண்ணைப்பட்டி பகுதியில் அமைந்துள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்படுகிறது. இவ்வாறு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ராட்சத குழாய்கள் மூலம் மதுரையில் உள்ள நீர்த்தேக்க தொட்டிகளில் சேமிக்கப்பட்டு வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில், மதுரை நகர் பகுதிக்குள் கடந்த ஒரு வாரமாக வினியோகிக்கப்படும் குடிநீர் மஞ்சள் நிறமாகவும், சாக்கடை போன்ற துர்நாற்றத்துடனும் இருந்தது. இதனால், இந்த நீரை குடிக்க பயன்படுத்துவதை பொதுமக்கள் தவிர்த்தனர். அதற்கு பதிலாக, பணம் கொடுத்து கேன் தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
அணை தண்ணீர்
இது குறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "வைகையில் இருந்து குடிநீர் தேவைக்காக எடுக்கப்பட்ட நீர் லேசான மஞ்சள் கலந்து இருந்தது. இதனையடுத்து, அதனை குளோரின் கலந்து தெளிவாக சுத்தப்படுத்தப்பட்டது. நிறம் தான் இவ்வாறு இருக்கிறதே தவிர குடிநீர் முழுமையாக சுத்திகரிக்கப்பட்டது தான். இனி வரும் நாட்களில் வழங்கப்படும் தண்ணீர் மஞ்சள் நிறத்தில் இருக்க வாய்ப்பு இல்லை"என்றார்.
Related Tags :
Next Story