நெல்லை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரம்


நெல்லை மாவட்டத்தில்  கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 14 April 2021 12:48 AM IST (Updated: 14 April 2021 12:48 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அரசு மருத்துவக் கல்லூரியில் ஒரு நாளைக்கு 1000 பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அரசு மருத்துவக் கல்லூரியில் ஒரு நாளைக்கு 1000 பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அதிகரிப்பு

கொரோனா 2-வது பரவலை தடுப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தல், கூட்டம் கூடுதலை தவிர்த்தல், கோவில் திருவிழா நடத்துவதற்கு தடை என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான பணியையும் மும்முரமாக செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. தற்போது சில உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டப்படுத்த தினமும் மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

தடுப்பூசி பணிகள் மும்முரம்

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி பல்நோக்கு மருத்துவமனை மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் ஆஸ்பத்திரிகள், அரசு ஆஸ்பத்திரிகள், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில்  கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் முதல் கோவேக்சின், கோவிஷீல்டு என இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி பல்நோக்கு மருத்துவமனையில் தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் வந்து கொரோனா தடுப்பூசிகளை போட்டு செல்கின்றனர்.
நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் ரவிச்சந்திரன், பல்நோக்கு மருத்துவமனை உறைவிட மருத்துவர் டாக்டர் ஷர்மிளா ஆகியோர் நேரடி கண்காணிப்பில் தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

1000 பேர் இலக்கு

இதுபற்றி டாக்டர் ஷர்மிளா கூறுகையில், “நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி பல்நோக்கு மருத்துவமனைக்கு வரும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு 1000 பேருக்கு தடுப்பூசிகள் போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது. 

இதுவரை கோவேக்சின் 5 ஆயிரத்து 322 பேருக்கும், கோவிஷீல்டு 8 ஆயிரத்து 572 பேருக்கும் போடப்பட்டு உள்ளது. அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அப்போது தான் இந்த நோயை முழுமையாக கட்டுப்படுத்த முடியும்” என்றார்.

Next Story