முககவசம் அணியவில்லை என கடையில் சாப்பிட்ட பெண் வியாபாரிக்கு அபராதம்
வி.கைகாட்டியில் கடையில் சாப்பிட்ட பெண் வியாபாரிக்கு முக கவசம் அணியவில்லை என அபராதம் விதிக்கப்பட்டதை கண்டித்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வி.கைகாட்டி:
அபராதம் வசூல்
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி ரெட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருடைய மனைவி அலமேலு (வயது 40). இவர் அப்பகுதியில் டீக்கடை, பழக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் வி.கைகாட்டி, தேளூர், ரெட்டிப்பாளையம் பகுதிகளில் நேற்று வருவாய்த்துறையினர் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முக கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களிடம் அபராதம் வசூலித்தனர்.
நேற்று மாலை அலமேலு கடையில் சாப்பிட்டுவிட்டு கை கழுவ சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த வருவாய்த்துறையினர், அலமேலு முககவசம் அணியவில்லை என்று கூறி ரூ.200 அபராதம் வசூலித்துள்ளனர். இதேபோல் அப்பகுதியில் வியாபாரிகள் சிலர் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடித்தபோதும், அவர்களிடமும் அபராதம் வசூலித்ததாக கூறப்படுகிறது.
சாலை மறியல்
இதனால் ஆத்திரம் அடைந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் திரண்டனர். இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலீசாரிடம், நடந்த சம்பவம் பற்றி தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து அவர்களிடம், கயர்லாபாத் இன்ஸ்பெக்டர் கவுரி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வருவாய்த்துறையினரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் உறுதியளித்ததின்பேரில், மறியலை கைவிட்டு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story