அரசு மருத்துவமனையில் செல்போன் திருடிய வாலிபர்-பெண் கைது


அரசு மருத்துவமனையில் செல்போன் திருடிய வாலிபர்-பெண் கைது
x
தினத்தந்தி 14 April 2021 1:10 AM IST (Updated: 14 April 2021 1:10 AM IST)
t-max-icont-min-icon

நோயாளிகளின் உறவினர்கள்போல் படுத்திருந்து அரசு மருத்துவமனையில் செல்போன் திருடிய வாலிபர் மற்றும் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர்:

செல்போன் திருட்டு
பெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுடைய செல்போன்கள் கடந்த சில நாட்களாக திருட்டு போனது. இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு இந்திரா நகரை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய உறவினரான ராஜபூபதி, துறைமங்கலம் நான்குரோடு அருகே ஏற்பட்ட விபத்தில் சிக்கி பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உதவியாக மருத்துவமனையில் மணிகண்டன் தங்கியிருந்தார்.
நேற்று முன்தினம் இரவு மருத்துவமனையில் 2 பேர் நோயாளிகளின் உறவினர்கள் போல் படுத்திருந்து, மணிகண்டனின் செல்போனை லாவகமாக திருடினர். இதையடுத்து சிறிது நேரத்தில் அங்கிருந்தவர்கள், செல்போனை திருடிய வாலிபர் மற்றும் இளம்பெண்ணை பிடித்து பெரம்பலூர் அரசு மருத்துவமனை புறக்காவல் நிலைய போலீசார் உதவியுடன் பெரம்பலூர் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணை
அவர்களிடம், போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த வாலிபர் வேப்பந்தட்டை தாலுகா வெங்கனூர் மாரியம்மன் கோவில் தெருவைச்சேர்ந்த கண்ணனின் மகன் முரளி (வயது 20) என்பது தெரியவந்தது. மேலும் அவர் சென்னை குன்றத்தூரில் தங்கி கூலி வேலை செய்தபோது மதுரை கீரபாண்டி கிராமத்தை சேர்ந்த சுரேசின் மகள் நந்தினிக்கும்(20), அவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
முரளி, நந்தினியை அழைத்துக்கொண்டு பெரம்பலூர் வந்துள்ளார். பெரம்பலூரில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஒருவரை பார்க்க வந்ததுபோல், இருவரும் சேர்ந்து மணிகண்டனின் செல்போனை திருடியது, போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது
இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தார். பின்னர் அவர்கள் பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர்.
அரசு மருத்துவமனையில் செல்போன்கள் திருட்டு சம்பவங்களில் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டு உள்ளார்களா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story