நெல்லை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கு கூடுதலாக 3 ஆஸ்பத்திரிகளில் 415 படுக்கைகள் தயார் கலெக்டர் விஷ்ணு நேரில் ஆய்வு


நெல்லை மாவட்டத்தில்  கொரோனா சிகிச்சைக்கு கூடுதலாக 3 ஆஸ்பத்திரிகளில் 415 படுக்கைகள் தயார்  கலெக்டர் விஷ்ணு நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 14 April 2021 1:17 AM IST (Updated: 14 April 2021 1:17 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக 3 ஆஸ்பத்திரிகளில் 415 படுக்கைகள் தயார் செய்யப்பட்டு உள்ளது.

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக 3 ஆஸ்பத்திரிகளில் 415 படுக்கைகள் தயார் செய்யப்பட்டு உள்ளது. 

சிறப்பு சிகிச்சை மையங்கள்

நெல்லை மாவட்டத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதையொட்டி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளின் எண்ணிக்கை நிரம்பியுள்ளது. அங்கு 1,240 படுக்கைகள் தற்போது தயார் நிலையில் உள்ளன. இது தவிர கடந்த ஆண்டை போல சிறப்பு மையங்களை உருவாக்கி அங்கு நோயாளிகளை தங்க வைத்து சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி பாளையங்கோட்டை சித்த மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் 200 படுக்கை வசதிகள், பத்தமடை சுவாமி சிவானந்தா தர்ம நூற்றாண்டு ஆஸ்பத்திரி 110 படுக்கை வசதிகள், கூடங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் 105 படுக்கை வசதிகள் கொரோனா நோயாளிகளுக்காக தயார் படுத்தப்பட்டுள்ளது.

கலெக்டர் ஆய்வு

இந்த நிலையில் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள படுக்கைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் விஷ்ணு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், மருத்துவ கல்லூரி முதல்வர் திருத்தணி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் வரதராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதுகுறித்து கலெக்டர் விஷ்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

கூடுதல் ஏற்பாடு

நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கும் வகையில் நெல்லை மாவட்டத்தில் மேலும் 3 இடங்களில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் செயல்பட மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் 200 படுக்கை வசதிகள், பத்தமடை சுவாமி சிவானந்தா தர்ம நூற்றாண்டு ஆஸ்பத்திரியில் 110 படுக்கைகள், கூடங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் 105 படுக்கைகள் என மொத்தம் 415 படுகைகள் தயார்படுத்தப்பட்டு உள்ளது. 

இந்த சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்படும் அனைத்து நோயாளிகளுக்கும் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வழங்கப்படும்.

பரிசோதனை முடிவு

பொதுமக்கள் கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டிருந்தால், காலதாமதம் இன்றி ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி மற்றும் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா நோய் பரிசோதனை செய்து கொள்ளலாம்.

பரிசோதனை முடிவுகளை 24 மணி நேரத்திற்குள் பாதிக்கப்பட்டவருக்கு தெரிவிக்கவும் தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க போதுமான அளவு மருந்து, மாத்திரைகள் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் கொரோனா நோய் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்கவும், புகார் அளிக்கவும் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கிவரும் கொரோனா கட்டுப்பாட்டு மையத்தை 0462-201012 அல்லது 1077 என்ற எண்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும் 6374013254 மற்றும் 94999 33893 என்ற செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தியாகவும், வாட்ஸ்-அப் மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம்.

முககவசம் கட்டாயம்

பொதுமக்கள் முககவசம் அணிந்து நடமாடுவதை உறுதிசெய்யவும், பொது இடங்கள், வியாபார நிறுவனங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் சமூக இடைவெளி கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் அபராதம் விதிக்கவும் தக்க நடவடிக்கைகள் எடுக்கவும் வருவாய் துறை, போலீஸ், சுகாதாரத்துறை, உள்ளாட்சித் துறையினர் தனித்தனி குழுக்களாக இயங்கி வருகின்றனர்.

தற்போது கூடுதலாக வருவாய் துறை அலுவலர்களை கொண்டு 10 சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு அதன் மூலம் கடந்த 1-ந் தேதி முதல் நேற்று வரை ரூ.29 லட்சத்து 76 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story