குமரியில் கொரோனாவுக்கு 3 பேர் பலி
குமரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் பரிதாபமாக இறந்தனர். இதனால் மாவட்டத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 339 ஆக உயர்ந்துள்ளது.
நாகர்கோவில்:
குமரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் பரிதாபமாக இறந்தனர். இதனால் மாவட்டத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 339 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பு
குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு உயர்ந்துவரும் எண்ணிக்கை மாவட்ட மக்களை அச்சத்தில் ஆழ்த்தி கொண்டிருக்கிறது.
கடந்த சில மாதங்களாக குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10-க்குள்ளாக இருந்்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அதிலும் குறிப்பாக தேர்தலுக்குப் பிறகு இந்த எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரே நாளில் 107 பேர் பாதிப்புக்கு உள்ளானார்கள். நேற்றுமுன்தினம் 129 பேர் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். இதனால் குமரி மாவட்டத்தில் 17 ஆயிரத்து 762 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
3 பேர் பலி
கடந்த சில மாதங்களாக கொரோனா குறைவாக இருந்ததால், பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் இரண்டு ஆண் உள்பட 3 பேர் கொரோனாவால் பலியாகி இருக்கிறார்கள் அதன் விவரம் வருமாறு:-
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியை சேர்ந்த 63 வயதுடைய ஆண் தொழில் விஷயமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு குமரி மாவட்டம் வந்திருந்தார். அப்போது அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டது. உடனே அவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அவர் அந்த ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார்.
நெல்லையை சேர்ந்தவர்கள்
இதேபோல் நெல்லை மாவட்டம் சிங்கம்பத்து அக்பர் நகரைச் சேர்ந்த 85 வயது முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் 1.45 மணியளவில் பரிதாபமாக இறந்தார்.
மேலும் நெல்லை மாவட்ட பகுதியை சேர்ந்த 52 வயது பெண்ணும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.
இந்த மூன்று பேரையும் சேர்த்து குமரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 339 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிதாக 88 பேர் பாதிப்பு
குமரி மாவட்டத்தில் நேற்று 88 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதாவது நாகர்கோவில்-37, அகஸ்தீஸ்வரம்-15, குருந்தன்கோடு-2, மேல்புறம்-5, முன்சிறை-1, ராஜாக்கமங்கலம்-3, திருவட்டார்-17, தோவாளை-2, தக்கலை-3 மற்றும் நெல்லை மாவட்டத்தில் இருந்து வந்த 3 பேர் என மொத்தம் 88 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இதன் மூலம் குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 850 ஆக உயர்ந்து உள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Related Tags :
Next Story