நங்கவள்ளி அருகே மகனை கொடுவாளால் வெட்டிக்கொன்ற தந்தை கைது பேத்திகள் பெயரில் சொத்தை எழுதி வைக்குமாறு தகராறு செய்ததால் கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம்
நங்கவள்ளி அருகே மகனை கொடுவாளால் வெட்டிக்கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர். பேத்திகள் பெயரில் சொத்தை எழுதி வைக்குமாறு தகராறு செய்ததால் மகனை கொடுவாளால் வெட்டிக்கொன்றதாக அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேச்சேரி:
நங்கவள்ளி அருகே மகனை கொடுவாளால் வெட்டிக்கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர். பேத்திகள் பெயரில் சொத்தை எழுதி வைக்குமாறு தகராறு செய்ததால் மகனை கொடுவாளால் வெட்டிக்கொன்றதாக அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
மகனை கொன்ற தந்தை
சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே குட்டப்பட்டி ஊராட்சி எல்லை குட்டையூரை சேர்ந்தவர் மணி (வயது 65). இவருடைய மகன் கலையரசன் (31), பொக்லைன் ஆப்ரேட்டர். இவரை கடந்த 1-ந் தேதி இரவு, தந்தை மணி கொடுவாளால் வெட்டி படுகொலை செய்தார்.
இந்த கொலை சம்பவத்தின் போது மகனுடன் ஏற்பட்ட தகராறில் மணி காயம் அடைந்தார். அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்த நிலையில் நேற்று நங்கவள்ளி போலீசார் மணியை கைது செய்தனர்.
வாக்குமூலம்
போலீசில் மணி அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
நானும், எனது மகன் கலையரசனும் எனது தந்தை பெயரில் உள்ள 4½ ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வந்தோம். கலையரசனுக்கு இளமதி என்ற மனைவியும், மவுசிகா (14), நித்தீஸ்வரி (13), மதுமித்திரா (8) ஆகிய 3 மகள்களும் உள்ளனர். எங்களின் விவசாய நிலத்தில் வரும் வருமானத்தை வைத்து நானும், எனது மகனும் மது குடித்து செலவழித்ததுடன், தகராறும் செய்து வந்தோம்.
இந்த நிலையில் எனது மருமகள் எங்கள் இருவரிடமும், தினமும் குடித்து விட்டு வந்து செலவு செய்து விட்டால் எனது மகள்களின் எதிர்காலம் என்ன ஆவது என கேட்டாள். மேலும் 3 மகள்களின் எதிர்காலம் கருதி எங்களிடம் உள்ள 4½ ஏக்கர் நிலத்தை பேத்திகள் பெயரில் எழுதி வையுங்கள் என இருவரிடமும் கேட்டாள்.
கோவில் திருவிழா
இதனால் மது குடித்துவிட்டு வந்து நான் மருமகளிடம் தகராறு செய்தேன். எனது மருமகள் கோபித்துக்கொண்டு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அவளது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டாள். இதனால் எனது மகன் கலையரசன் மனைவியை பிரிந்து என்னுடன் இருந்தான். கடந்த 1-ந் தேதி எல்லைக்குட்டையூர் பகுதியில் உள்ள கோவில் திருவிழாவிற்கு எனது மருமகள் இளமதியும், 3 பேத்திகளும் எங்கள் வீட்டிற்கு வந்தனர்.
அப்போது எனது மகன், தனது மனைவியை இங்கேயே தங்கி குடும்பம் நடத்துமாறு கேட்டான். அப்போது மருமகள் எனது மகனிடம் சொத்தை 3 மகள்களின் பெயரில் எழுதி வைத்தால் தான் குடும்பம் நடத்த வருவேன் என கூறிவிட்டு திருவிழாவுக்கு சென்று விட்டாள்.
கொடுவாளால் வெட்டிக்கொன்றேன்
இதையடுத்து என்னிடம் எனது மகன் கலையரசன் நான் மனைவியை பிரிந்து எவ்வளவு நாள் தனியாக குடும்பம் நடத்துவது. எனவே அந்த விவசாய நிலத்தை தனது மகள்கள் பெயரில் எழுதி வைக்குமாறு கேட்டு தகராறு செய்தார். அப்போது எனக்கும், மகனுக்கும் தகராறு ஏற்பட்டது.
பின்பு நீ உயிரோடு இருந்தால் தானே உனது மகள்கள் பெயரில் சொத்தை எழுதி வைக்கச் சொல்லி கேட்பாய் எனக்கூறி எனது மகன் கலையரசனை கொடுவாளால் வெட்டிக்கொன்றேன்.
இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story