போலி ஆவணங்கள் தயாரித்து 46 ஏக்கர் நிலம் மோசடியாக விற்பனை
திருச்சுழி அருகே போலி ஆவணங்கள் தயாரித்து 46 ஏக்கர் நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர்,
திருச்சுழி அருகே போலி ஆவணங்கள் தயாரித்து 46 ஏக்கர் நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
46 ஏக்கர் நிலம்
சென்னையை சேர்ந்த உண்ணாமலை தியாகராஜன் என்பவர் கடந்த 1996 முதல் 1998-ம் ஆண்டுகளில் திருச்சுழி அருகே உள்ள ஆண்மை பெருக்கி மற்றும் சீராம்புதூர் கிராமங்களில் 46 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார்.
இடையில் அவர் நீண்ட நாட்களாக நிலத்தை கவனிக்கவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு அந்த நிலத்தை விற்பதற்காக வில்லங்க சான்றிதழ் பெற நடவடிக்கை எடுத்த போது மேற்படி 46 ஏக்கர் நிலமும் வேறு பெயர்களில் மாறி உள்ளது தெரியவந்தது.
விசாரணை
இதனை தொடர்ந்து மாவட்ட பதிவாளரிடம் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக மாவட்ட பதிவு அலுவலகத்தில் விசாரணை நடந்து வந்த போதிலும் விசாரணையில் திருப்தி அளிக்காத அவர் விருதுநகர் மாவட்ட நில அபகரிப்பு குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாவிடம் புகார் செய்தார்.
இதனைத்தொடர்ந்து மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மேற்படி 46 ஏக்கர் நிலமும் மோசடியாக விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்ததன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணையை துரிதப்படுத்தினர்.
மேல் விசாரணையில் ஏ.முக்குளத்தை சேர்ந்த ஆதிமூலம் (வயது 53) என்பவர் மேற்படி நிலத்தை மதுரை பால ரெங்காபுரத்தை சேர்ந்த விஜயகுமார் (43) என்பவருக்கு பவர் பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளார்.
52 பேருக்கு விற்பனை
அவர் பவர் கொடுக்கும் பொழுது தனக்கு சொந்தமான 7½ ஏக்கர் நிலத்தையும் சேர்த்து அவர் எழுதி கொடுத்துள்ளார்.
விஜயகுமார் கள்ளிக்குடியை சேர்ந்த மணி முருகன் (32) என்பவர் துணையுடன் அவரது தாயார் வள்ளிமயில் (56) என்பவரை உண்ணாமலை தியாகராஜன் என காட்டி அடையாள அட்டை தயாரித்து அதன் அடிப்படையில் 46 ஏக்கர் நிலத்தையும் விற்பனை செய்துள்ளனர்.
46 ஏக்கர் நிலமும் மோசடியாக 52 பேருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது.
அடையாள அட்டை
அருப்புக்கோட்டையை சேர்ந்த பொன்ராஜ் (73) என்பவர் தனது மனைவி பெயரில் உள்ள அடையாள அட்டையை திருமங்கலம் தாலுகா செங்கப்படை கிராமத்தைச் சேர்ந்த சங்கரமூர்த்தி (34) என்ற புகைப்படக்காரர் மூலம் தனது பெயர் தியாகராஜன் என்றும் தனது மனைவி உண்ணாமலை என்றும் அடையாள அட்டைதயாரித்து வள்ளிமயிலிடம் கொடுத்துள்ளார்.
இதற்கிடையில் தனது மனைவி பெயரில் போலியாக அடையாள அட்டை தயாரித்து கொடுத்து உள்ளதாக மாவட்ட பதிவாளரிடம் புகார் கொடுத்து சமரசம் பேசி ரூ.1 லட்சம் பெற்றுக்கொண்டு விலகி கொண்டுள்ளார். அனைவரும் திட்டமிட்டே இதனை செய்துள்ளனர். சங்கரமூர்த்தி, மணி முருகனின் நண்பர் ஆவார்.
கைது
இதனை தொடர்ந்து நில அபகரிப்பு பிரிவு போலீசார் நேற்று ஆதிமூலம், விஜயகுமார், மணி முருகன், அவரது தாயார் வள்ளி மயில், பொன்ராஜ், சங்கரமூர்த்தி ஆகிய 6 பேரையும் கைது செய்து காவலுக்கு அனுப்பி வைத்தனர். போலி ஆவணங்களுக்கு சாட்சி கையெழுத்திட்டதாக கார்த்திகேயன், மகாலிங்கம் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா கூறுகையில் இதனை தொடர்ந்து விஜயகுமார் 52 பேருக்கு விற்பனை செய்துள்ள விவரங்களை சேகரித்து அந்த கிரையப் பத்திரங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story