சில்லறை காய்கறி வியாபாரிகள் வெளியேற மறுப்பு: திருச்சி காந்தி மார்க்கெட்டை மீண்டும் முழுமையாக மூட மாநகராட்சி திட்டம்


சில்லறை காய்கறி வியாபாரிகள் வெளியேற மறுப்பு: திருச்சி காந்தி மார்க்கெட்டை மீண்டும் முழுமையாக மூட மாநகராட்சி திட்டம்
x
தினத்தந்தி 14 April 2021 3:08 AM IST (Updated: 14 April 2021 3:08 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி காந்தி மார்க்கெட்டை விட்டு வெளியேற மறுத்து சில்லறை காய்கறி வியாபாரிகள் அடம் பிடித்து வருவதால், மீண்டும் காந்தி மார்க்கெட்டை முழுமையாக மூடுவது குறித்து மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது.


திருச்சி, 
திருச்சி காந்தி மார்க்கெட்டை விட்டு வெளியேற மறுத்து சில்லறை காய்கறி வியாபாரிகள் அடம் பிடித்து வருவதால், மீண்டும் காந்தி மார்க்கெட்டை முழுமையாக மூடுவது குறித்து மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது.

சில்லறை வியாபாரத்திற்கு தடை

கொரோனா 2-வது அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருவதால், அதை தடுக்கும் வகையில் பொதுமக்கள் கூட்டம் அதிகமுள்ள திருச்சி காந்தி மார்க்கெட்டில் மொத்த காய்கறி மற்றும் தரைக்கடை சில்லறை வியாபாரத்திற்கு அரசு தடை விதித்தது. அதற்கு பதிலாக ரெயில்வேக்கு சொந்தமான பொன்மலை ஜி-கார்னர் திடலில் தற்காலிக கடைகளை அமைத்து சில்லறை வியாபாரத்தை நடத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.

அதேவேளையில் காந்தி மார்க்கெட்டில் மொத்த வியாபாரம் செய்ய எவ்வித தடையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்காக நேற்று முன்தினம் இரவு முதல் காய்கறி மொத்த வியாபாரமும், சில்லறை வியாபாரமும் ஜி-கார்னர் திடலில் செயல்படும் வகையில் மின் விளக்குகள் வசதிகள் மற்றும் குடிநீர் வசதியும் செய்யப்பட்டு இருந்தது.

செல்ல மறுத்து அடம்

நேற்று முன்தினம் இரவு சுமார் 10-க்கும் மேற்பட்ட சில்லறை வியாபாரிகள் மட்டும் வியாபாரம் ஆயத்தமாக இருந்தனர். ஆனால் அங்கு சில்லறை வியாபாரிகள் முழுமையாக வரவில்லை. இதை அறிந்த ஜி-கார்னர் திடலில் சில்லறை வியாபாரம் செய்து கொண்டிருந்த வியாபாரிகள் சிலர், திருச்சி காந்தி மார்க்கெட்டில் விரைந்து சென்றனர்.

அங்கு நள்ளிரவு வேளையில் மொத்த வியாபாரமும், சில்லறை வியாபாரமும் ஜரூராக நடந்து கொண்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காந்தி மார்க்கெட்டின் ஒரு கேட் அருகில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை 3 மணிக்கு இந்த போராட்டம் நடந்தது.

பின்னர் சமாதானமாகி காந்தி மார்க்கெட்டிற்குள்ளையே சில்லறை வியாபாரிகள், தங்கள் விற்பனையை தொடர்ந்தனர். காந்தி மார்க்கெட்டை விட்டு வெளியேற மாட்டோம் என்று சில வியாபாரிகள் அடம் பிடித்ததே இதற்கு காரணம். அதைத்தொடர்ந்து சில்லறை வியாபாரிகள் ஜி-கார்னர் திடலுக்கு செல்வதில் இழுபறி நீடித்து வருகிறது. அதே நேரம் பகலில் வியாபாரம் நடக்கவில்லை. காய்கறி கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

மீண்டும் முழுமையாக மூட ஆலோசனை

இந்த நிலையில் ஜி-கார்னர் திடலுக்கு சில்லறை வியாபாரிகள் செல்ல மறுப்பதையொட்டி கடந்த ஆண்டை போலவே காந்தி மார்க்கெட்டை மீண்டும் முழுமையாக மூடுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரணியன் கூறுகையில், ‘அரசு வழிகாட்டும் நெறி முறைகளுக்கேற்ப, சில்லறை வியாபாரிகளுக்கு ஜி-கார்னர் திடலில் கடைகள் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளன. காந்தி மார்க்கெட்டில் மொத்த வியாபாரம் நடைபெற எந்தவித தடையுமில்லை. ஆனால் சில்லறை வியாபாரம் காந்தி மார்க்கெட்டில் நடத்த முடியாது. அதற்கு அனுமதியும் கிடையாது. சில்லறை வியாபாரம் ஜி-கார்னரில் மட்டுமே நடத்திக்கொள்ள வேண்டும். மீறி காந்தி மார்க்கெட்டில் நடத்த முயன்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மறு அறிவிப்பு வரும் வரை சில்லறை வியாபாரம் ஜி-கார்னர் பகுதியிலேயே நடை பெறும்’ என்றார்.

Next Story