தூய்மை பணியாளர்களுக்கு உள்ளாட்சி நிர்வாகமே சம்பளம் அளிக்க வேண்டும்


தூய்மை பணியாளர்களுக்கு உள்ளாட்சி நிர்வாகமே சம்பளம் அளிக்க வேண்டும்
x
தினத்தந்தி 14 April 2021 4:10 AM IST (Updated: 14 April 2021 4:10 AM IST)
t-max-icont-min-icon

தூய்மை பணியாளர்களுக்கு உள்ளாட்சி நிர்வாகமே சம்பளம் அளிக்க வேண்டும்

கோவை

கர்நாடக மாநிலத்தை போல தூய்மை பணியாளர்களுக்கு உள்ளாட்சி நிர்வாகமே சம்பளம் அளிக்க வேண்டும் என்று தேசிய தூய்மை பணியாளர் நல ஆணைய தலைவர் வெங்கடேசன் கூறினார்.

ரூ.1 லட்சம் நிவாரண நிதி

கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த ஒப்பந்த தூய்மை பணியாளர் பிரகாஷ் (வயது32) நேற்று பணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். 

இந்த நிலையில், தேசிய தூய்மை பணியாளர் நல ஆணைய தலைவர் வெங்கடேசன் நேற்று பிரகாஷ் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ரூ.1 லட்சம் நிவாரண நிதி உதவி வழங்கினார். இதையடுத்து வெங்கடேசன் நிருபர்களிடம் கூறியதாவது

தூய்மை பணியாளர் இறந்த தகவல் தேசிய துப்புரவு ஆணையத்திற்கு வந்த உடன் மாவட்ட கலெக்டரை அணுகி அவரது குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசின் இலவசமான "ஆயுஸ் மான் இன்சூரன்ஸ்" திட்டத்தின் கீழ் இன்சூரன்ஸ் செய்து தரவும் பேசியுள்ளோம். இதில் அனைத்து ஊழியர்களும் சேர்ந்து கொள்ளலாம். பிரதமரின் 12 ரூபாய் விபத்து காப்பீடு, 330 ரூபாய் ஆயுள் காப்பீடு போன்றவையும் உள்ளது. இது தனிப்பட்ட நபர் செலுத்த வேண்டியது. அதை அரசாங்கமே கட்டுவதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

ஒப்பந்த தொழிலாளர்கள்

கர்நாடக மாநிலத்தில் ஒப்பந்த ஊழியர்கள் முறையே இல்லை. மாநக ராட்சி நிர்வாகமே பணியாளர்களுக்கு சம்பளம் அளித்து வருகிறது. அது போலவே ஒப்பந்த தொழிலாளர் முறை ஒழிக்கப்பட்டு அனைத்து மாநிலங்களிலும் உள்ளாட்சி நிர்வாகமே சம்பளம் அளிக்கும் நடைமுறையை செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்க கோரி அனைத்து மாநில முதல் - அமைச்சர்களிடமும் கூறி வருகிறோம். இது போன்ற நல வாரியம் இருப்பதே அதிக மக்களுக்கு தெரியவில்லை.

மலக்குழியில் இறங்க கூடாது

இது போன்ற ஒரு வாரியம் இருப்பது மக்களுக்கு தெரிய வேண்டும். அப்போதுதான் பல்வேறு பிரச்சினைகளை குறைக்க முடியும். மலக்குழியில் இறங்க கூடாது என்ற சட்டம் இருக்கிறது. ஆனாலும் பலரும் அதில் இறங்கி உயிரிழக்கின்றனர். 

இந்த தொழிலில் ஈடுபடுபவர்களை மீட்டு அவர்களுக்கு கடன் கிடைக்க ஏற்பாடு செய்து வேறு வேலைக்கு செல்ல பரிந்துரை செய்து வருகிறோம். ஒப்பந்த ஊழியர்கள் அவர்களது குறைகளை புகார்கள் மூலம் தெரிவித்தால் அவர்களுக்கு உடனடியாக குறைகளை களைய நடவடிக்கை எடுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.


Next Story