விவசாயிகள் மத்தியில் நடைபெறும் பனிப்போர்: கீழ்பவானி வாய்க்கால் சீரமைக்க நபார்டு வங்கி நிதி அளிக்கக்கூடாது என்று கோரிக்கை- ஒருங்கிணைந்த தீர்வு எட்டப்படுமா?


விவசாயிகள் மத்தியில் நடைபெறும் பனிப்போர்: கீழ்பவானி வாய்க்கால் சீரமைக்க நபார்டு வங்கி நிதி அளிக்கக்கூடாது என்று கோரிக்கை- ஒருங்கிணைந்த தீர்வு எட்டப்படுமா?
x
தினத்தந்தி 14 April 2021 4:28 AM IST (Updated: 14 April 2021 4:28 AM IST)
t-max-icont-min-icon

கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பது தொடர்பாக விவசாயிகள் மத்தியில் நடைபெறும் பனிப்போரின் உச்சகட்டமாக நபார்டு வங்கி இந்த திட்டத்துக்கு நிதி அளிக்கக்கூடாது என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

ஈரோடு
கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பது தொடர்பாக விவசாயிகள் மத்தியில் நடைபெறும் பனிப்போரின் உச்சகட்டமாக நபார்டு வங்கி இந்த திட்டத்துக்கு நிதி அளிக்கக்கூடாது என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
கீழ்பவானி திட்டம்
ஈரோடு மாவட்டத்தின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக இருப்பது பவானிசாகர் அணை. இந்த அணையின் மூலம் கீழ்பவானி, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை, காலிங்கராயன் ஆகிய பாசனப்பகுதிகள் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் தேவையான தண்ணீரை பெற்று வருகின்றன. ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி, திருப்பூர், கரூர் மாவட்ட பகுதிகளுக்கும் கீழ்பவானி வாய்க்கால் மிகப்பெரிய வரப்பிரசாதமாக உள்ளது.
பவானிசாகர் அணை கட்டப்பட்டு, கீழ்பவானி வாய்க்கால் பாசனம் பயன்பாட்டுக்கு வந்து சுமார் 70 ஆண்டுகள் ஆகின்றன. இந்த வாய்க்கால் கட்டும்போதே கான்கிரீட் தளம் அல்லது கரைகளுக்கு கல்லால் ஆன கரைகளோ அமைக்கப்படவில்லை. கொட்டு மண், அதாவது மண்ணை எடுத்து வந்து கரைகளாக கொட்டி பலப்படுத்தப்பட்டது.
ரூ.709 கோடி
இந்தநிலையில் கீழ்பவானி வாய்க்காலில் மண்கரைகள் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு பாசனத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து 2013-ம் ஆண்டு கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டது. அப்போது பாசன பகுதி விவசாயிகள் எதிர்த்ததால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.
இந்தநிலையில் சமீபத்தில் தமிழக அரசு ரூ.709 கோடியே 60 லட்சம் செலவில் கீழ்பவானி வாய்க்காலை சீரமைக்க திட்டமிட்டு இருக்கிறது. இந்த திட்டத்துக்கு கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் சங்கம், தற்சார்பு விவசாயிகள் சங்கம் என பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் ஆதரவு அளித்து உள்ளனர்.
அதிருப்தி
ஆனால், இன்னும் ஒரு தரப்பு விவசாயிகள் கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணி தொடர்பாக அதிருப்தியில் உள்ளனர். இதற்கிடையே கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தின் அமைப்பாளர் மு.ரவி என்பவர் நபார்டு வங்கியின் தலைமைப்பொது மேலாளருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு பணிகளுக்கு நபார்டு வங்கி நிதி அளிக்கக்கூடாது என்று கூறி உள்ளார்.
இதுபற்றி அவர் கூறியதாவது:-
கீழ்பவானி வாய்க்கால் மூலம் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் பெற்று வருகிறது. 1964-ம் ஆண்டு முதல் கீழ்பவானி பாசனம் 2 பிரிவாக பிரிக்கப்பட்டது. ஆகஸ்டு 15-ந் தேதி முதல் டிசம்பர் 15-ந் தேதி வரை 4 மாதம் நஞ்சை பயிர்களுக்கு தண்ணீர் விடப்படும். ஒற்றைப்படை மதகுகள் மூலம் விடப்படும் இந்த தண்ணீரில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் பாசனம் பெறும். டிசம்பர் 15-ந் தேதி முதல் ஏப்ரல் 15-ந் தேதி வரை 4 மாதங்கள் புஞ்சை பயிர்களுக்காக இரட்டைப்படை மதகுகள் மூலம் தண்ணீர் விடப்படும். இதன் மூலம் 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் பாசனம் பெறும். இவ்வாறு சுழற்சி முறையில் கீழ்பவானி பாசனம் நடந்து வருகிறது.
குடிநீர் ஆதாரம்
இதுதவிர கசிவுநீர் திட்டம் மூலம் தாராபுரம்கட் என அழைப்படும் பாசன பகுதியில் 36 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறுகிறது. கசிவு நீர், கிணறுகள் மூலம் இந்த பாசனம் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி பவானிசாகர் அணை முதல் கடைமடை பகுதியான மங்கலப்பட்டி வரை பிரதான வாய்க்காலில் வலது புறம் பாசனம் இல்லை. இங்குள்ள விவசாயிகள் கால்வாய் வெட்ட நிலம் கொடுத்தவர்கள் என்ற உரிமையில் அவர்களுக்கு அரசு விதிகளின் படி திறந்தவெளி கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகள் மூலம் பாசனம் பெற அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் கிணற்று பாசனமாக இருக்கிறது. நிலத்தடி நீர் செறிவூட்டுதல், குளம்-குட்டைகள் நிரம்புதல் ஆகியவை மூலம் மறைமுகமாக பல ஆயிரம் ஏக்கர் பாசனம் கிடைக்கிறது. கீழ்பவானி திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்ட 34 கசிவுநீர் திட்ட பாசனங்கள் மூலம் 18 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனம் அடையும். நேரடியாக 163 வருவாய் கிராமங்களும், பாசனம் இல்லாத சுமார் 150 வருவாய் கிராமங்களும் கீழ்பவானி வாய்க்கால் மூலம் குடிநீர் பெற்று வருகின்றன.
இப்படி மக்களுக்கு ஒரே நீர் ஆதாரமாக விளங்கும் கீழ்பவானியில் கான்கிரீட் போடுவதை ஏற்க முடியாது. 
2013-ம் ஆண்டு ரூ.1200 கோடியில் கான்கிரீட் தளம் அமைக்க திட்டமிடப்பட்டது. அந்த திட்டத்தில் வாய்க்கால் கரையில் உள்ள மரங்கள் வெட்டப்படும் அபாயம் இருந்தது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், கசிவு நீர் கிடைக்காமல் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அவலமும் நடக்கும் என்பதால் அப்போது கடுமையான போராட்டங்கள் நடத்தி திட்டத்தை திரும்பப்பெற வைத்தோம்.
கோரிக்கை
இந்தநிலையில்தான் மீண்டும் கீழ்பவானி வாய்க்காலில் சுமார் 125 மைல் தொலைவு அளவுக்கு வாய்க்கால் விரிவாக்குதல், புதுப்பித்தல், நவீனப்படுத்துதல் பணிகளுக்காக ரூ.709 கோடியே 60 லட்சத்தில் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது.இந்த திட்டம் கீழ்பவானி பாசன விவசாயிகளுக்கு எதிரானது என்பதை சுட்டிக்காட்டி தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறோம். இந்த திட்டம் கொண்டு வரப்பட்டால் 15 ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். விவசாயம் பாதிக்கும். எனவே தமிழக முதல்-அமைச்சர் முதல் மாவட்ட கலெக்டர் வரை இந்த திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று கோரிக்கை மனுக்கள் வழங்கி இருக்கிறோம்.
எதிரானது
இந்தியாவிற்கே முன்னோடி திட்டமாக இருக்கும் கீழ்பவானி பாசன கால்வாய் நவீனப்படுத்தும் திட்டத்தை நபார்டு வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்துவது மக்கள் நலனுக்கு எதிரானது ஆகும்.
அதுமட்டுமின்றி வாய்க்கால் நவீனப்படுத்தும் திட்டம் தொடர்பாக பாசன உரிமை பெற்ற விவசாயிகளிடமோ, மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், குறிப்பாக உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் எந்தவித கருத்தும் கேட்கப்படவில்லை. எனவே இந்த திட்டத்தை பாசனத்துக்கு உள்பட்ட 2 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் பாசன நில விவசாயிகளிடமும் கருத்து கேட்காமல் நிறைவேற்றக்கூடாது.
நிதி அளிக்க கூடாது
இந்த திட்டம் நிறைவேறினால் சுழற்சி முறையில் பாசனம்  வழங்கப்படும்போது கசிவுநீர் பாசனம் தடைப்படும். தாராபுரம் கட் பகுதி பெரும் பாதிப்பு அடையும். கிணற்று நீர் மூலம் பாசனம் பெறும் பகுதிகள் கடுமையாக பாதிக்கும். 34 கசிவுநீர் திட்டங்கள் மூலம் பயன்பெறும் பாசனமும் பாதிப்படையும். தடுப்பணைகளுக்கு கசிவுநீர் செல்வது தடைப்படும். மரங்கள் வெட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு அடையும். இந்த நவீனப்படுத்தும் திட்டம் மழைநீர் சேகரிப்பு திட்டத்துக்கு எதிரானதாக அமையும் என்ற காரணங்களை கூறி நபார்டு வங்கிக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளேன்.  நபார்டு வங்கி மூலம் பாசன திட்டம் பற்றியும், பாதிப்புகள் பற்றியும் கள ஆய்வு செய்து நபார்டு வங்கி கீழ்பவானி வாய்க்கால் சீரமைக்கும் திட்டத்துக்கு நிதி அளிக்கக்கூடாது என்று கூறி உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மவுனம் கலைக்க வேண்டும்
கீழ்பவானி வாய்க்கால் நவீனப்படுத்தும்  திட்டம் தொடர்பாக விவசாயிகள் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. 
எனவே இந்த திட்டம் தொடர்பாக ஒருங்கிணைந்த நல்ல முடிவு ஏற்பட வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தங்கள் மவுனத்தை கலைக்க வேண்டும். உடனடியாக இது தொடர்பாக விவசாயிகள் கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தியும், உண்மை நிலவரத்தை விவசாயிகள் பொதுமக்களிடம் எடுத்துக்கூறி எது இந்த சமூகத்துக்கு தேவையானது என்பதை ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story