ஈரோட்டில் கொரோனாவுக்கு முதியவர் பலி; மாவட்டத்தில் புதிதாக 88 பேருக்கு தொற்று


ஈரோட்டில் கொரோனாவுக்கு முதியவர் பலி; மாவட்டத்தில் புதிதாக 88 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 14 April 2021 4:29 AM IST (Updated: 14 April 2021 4:29 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியானார். மேலும், மாவட்டத்தில் புதிதாக 88 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

ஈரோடு
ஈரோட்டில் முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியானார். மேலும், மாவட்டத்தில் புதிதாக 88 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 
முதியவர் பலி
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன்பிறகு தொற்று பரவல் குறைய தொடங்கியதும் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் கொண்டு வரப்பட்டன.
மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 27-ந் தேதி 2 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். அன்றைய நிலவரப்படி மாவட்டத்தில் மொத்தம் 150 பேர் பலியாகி இருந்தார்கள். 
88 பேருக்கு பாதிப்பு
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட நாராயணவலசு பகுதியை சேர்ந்த 79 வயது முதியவர் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 9-ந் தேதி தனியார் ஆஸ்பத்திரியில்    அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் 11-ந் தேதி மாலையில்  இறந்தார்.
இதற்கிடையே ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக 88 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 136 ஆக உயர்ந்தது. இதில் 15 ஆயிரத்து 361 பேர் கொரோனாவில் இருந்து மீண்டார்கள். நேற்று மட்டும் 69 பேர் குணமடைந்தார்கள். தற்போது வரை 624 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை மொத்தம் 151 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

Next Story