சித்தோடு ஓட்டு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகள் தடைபட்டதால் பரபரப்பு


சித்தோடு ஓட்டு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகள் தடைபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 14 April 2021 4:30 AM IST (Updated: 14 April 2021 4:30 AM IST)
t-max-icont-min-icon

சித்தோடு ஓட்டு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகள் தடைபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு
சித்தோடு ஓட்டு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகள் தடைபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
கண்காணிப்பு கேமராக்கள் 
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் சித்தோடு சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரியிலும், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் கோபி கலை அறிவியல் கல்லூரியிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.
ஓட்டு எண்ணிக்கை வருகிற மே மாதம் 2-ந் தேதி நடைபெற உள்ளது. இதனால் வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
சூறாவளி காற்று
சித்தோடு சாலை போக்குவரத்து பொறியியல் கல்லூரியில் ஒரு தொகுதிக்கு 16 கண்காணிப்பு கேமராக்கள் வீதம், மொத்தம் 96 கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அதில் பதிவாகும் வீடியோக்களை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு வேட்பாளர்களின் முகவர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் இருந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் சித்தோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் டி.வி.க்களுக்கு செல்லும் மின்ஒயரில் பழுது ஏற்பட்டு காட்சிகள் தடைபட்டன. மேலும், தடுப்புகளும், சாமியானா பந்தலும் சாய்ந்தன. இதையடுத்து வேட்பாளர்கள், அவர்களது முகவர்களை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அழைத்து பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக விளக்கம் அளித்தனர். கண்காணிப்பு கேமரா பதிவு மற்றும் வீடியோ ஒளிபரப்பு செய்யப்படுவதை சீரமைக்கும் பணி உடனடியாக தொடங்கி நடந்தது. அங்கு புதிய இணைப்புகள் வழங்கப்பட்டு நேற்று பகல் 11 மணிஅளவில் மீண்டும் ஒளிபரப்பு தொடங்கப்பட்டது. மழை காரணமாக கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகள் தடைப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story