சித்திரை விசுவை முன்னிட்டு சங்கரராமேசுவரர் கோவிலில் சிறப்பு பூஜை
சித்திரை விசுவை முன்னிட்டு சங்கரராமேசுவரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி சங்கர ராமேசுவரர் கோவிலில் சித்திரை விசுவை முன்னிட்டு திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
சித்திரை விசு
தமிழ் மாதங்களில் முக்கியத்துவம் வாய்ந்த மாதங்களில் சித்திரை மாதமும் ஒன்றாகும். இந்த சித்திரை மாத பிறப்பை சித்திரை விசுவாக மக்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தன. கனிகளை சுவாமிக்கு படைத்து சிறப்பு தீபாராதனைகள் நடத்தப்பட்டன.
அன்னாபிஷேகம்
தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவிலில் தமிழ்புத்தாண்டு சித்திரைவிசுவை முன்னிட்டு நேற்று அதிகாலை முதல் கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தன. காலையில் ஆறுமுக அரச்சனை, தீபாராதனை நடந்தது. சுவாமி கோவில் மாடவீதியில் உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது.
தொடர்ந்து சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு அன்னாபிஷேம் நடந்தது. சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டன.
உடல் வெப்பநிலை பரிசோதனை
நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்யவும், முககவசம் கட்டாயமாக அணியவும் அறிவுறுத்தப்பட்டனர். கோவில் வளாகத்தில் சமூக இடைவெளியும் கடைபிடிக்கப்பட்டது.
Related Tags :
Next Story