எழும்பூர் ரெயில் நிலையத்தில் காவலாளி கூட இல்லாத ‘ஸ்மார்ட் கார் பார்க்கிங்’ வாகனங்களுக்கு பாதுகாப்பு இல்லை என புகார்
எழும்பூர் ரெயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘ஸ்மார்ட் கார் பார்க்கிங்கில்’ காவலாளி இல்லாததால் வாகனங்களுக்கு பாதுகாப்பு இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
சென்னை,
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பயணிகளின் இரு சக்கர, 4 சக்கர வாகனங்களின் பார்க்கிங் வசதிக்காக, ஏற்கனவே சென்னை ரெயில்வே கோட்டம் கடந்த 2019-ம் ஆண்டு அடுக்குமாடி ‘பார்க்கிங்’ கட்டிடம் அமைக்க திட்டமிட்டு, கட்டிடம் கட்டும் பணியை தொடங்கியது.
ஆனால் பல்வேறு காரணங்களால் இன்று வரை தொடங்கப்பட்ட அந்த பணி தொடராமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஏற்கனவே ரெயில்வே நிர்வாகத்தால் ஒப்பந்த அடிப்படையில் இயங்கி கொண்டு வரும் எழும்பூர் ரெயில் நிலைய பார்க்கிங்கில் கார்கள் நிறுத்தும் வசதி இல்லாததால், தற்போது கார்கள் மட்டும் நிறுத்தும் வகையில் சென்னை ரெயில்வே கோட்டம், காந்தி இர்வின் சாலையில் ‘ஸ்மார்ட் கார் பார்க்கிங்’ வசதியை அமைத்துள்ளது.
24 மணி நேரத்துக்கு ரூ.500 கட்டணம்
அந்தவகையில் 25-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தும் அளவிற்கு அமைக்கப்பட்டுள்ள அந்த இடத்தில், கார்கள் நிறுத்த முதல் 2 மணி நேரத்துக்கு ரூ.40-ம், அடுத்த 2 மணி நேரத்துக்கு ரூ.60-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் 12 மணி நேரம் வரை ரூ.100-ம், 12 மணி நேரத்துக்கு பிறகு ஒவ்வொரு 24 மணி நேரமும் ரூ.500 கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது.
இந்த ஸ்மார்ட் கார் பார்க்கிங்கில் கார் உள்ளே நுழையும் போது, நுழைவு வாயிலில் தானியங்கி முறையில் ‘ஸ்கேன்’ செய்யும் கருவி மூலம் காரின் நம்பர் பதிவு செய்யப்பட்டு, டோக்கன் வழங்கப்படுகிறது. இவ்வளவு கட்டணம் வசூலிக்கும் ஸ்மார்ட் கார் பார்க்கிங்கில் எந்த ஒரு அடிப்படை வசதியும் ரெயில்வே நிர்வாகம் ஏற்படுத்தி கொடுக்கவில்லை என அங்கு வரும் பொதுமக்கள் குற்றம் சாட்டுக்கின்றனர்.
ரெயில்வே ஊழியர்கள் அதிருப்தி
உதாரணமாக 24 மணி நேரமும் செயல்படும் பார்க்கிங்கில் பாதுகாப்புக்காக ஒரு காவலாளி கூட நியமிக்கவில்லை என்றும், இதனால் வாகனங்களுக்கு பாதுகாப்பு இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
மேலும் நிழற்கூடம், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பார்க்கிங்கில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவசரத்துக்கு கழிவறை வசதி கூட அங்கு அமைக்கவில்லை என்றும் பொதுமக்கள் ஆதங்கம் தெரிவித்தனர். இந்த ஸ்மார்ட் கார் பார்க்கிங்கை ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை ரெயில்வே கோட்டம் ஒப்பந்தம் விடாமல், அவர்களே செயல்படுத்தி வருகின்றனர். இதனால் ரெயில்வே பணியாளர்களை கொண்டே டோக்கன் வழங்கும் பணியை செய்து வருகிறது.
நல்ல பதவியில் உள்ள ரெயில்வே பணியாளர்களை இதில் ஈடுபடுத்தியிருப்பது, ரெயில்வே ஊழியர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ரெயில்வே உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரெயில்வே ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story