மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பஞ்சாங்கம் படிப்பு: தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் இன்று வழக்கமான பூஜைகள்


மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பஞ்சாங்கம் படிப்பு: தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் இன்று வழக்கமான பூஜைகள்
x
தினத்தந்தி 14 April 2021 6:57 PM IST (Updated: 14 April 2021 6:57 PM IST)
t-max-icont-min-icon

தமிழ் புத்தாண்டு பிறப்பையொட்டி இன்று (புதன்கிழமை) கோவில்களில் வழக்கமான பூஜைகள் மட்டும் நடக்கிறது. கபாலீசுவரர் கோவிலில் பஞ்சாங்கம் வாசிப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. கோவில்களுக்கு முககவசம் அணிந்து வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகளுடன் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

சென்னை, 

தமிழ் புத்தாண்டு திருநாள் ஆண்டு தோறும் ஏப்ரல் 14-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு பிலவ ஆண்டு பிறக்கிறது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் வீடுகளை சுத்தம் செய்து, அதிகாலையில் நீராடி கோலமிட்டு, புத்தாடை அணிந்து, கோவிலுக்குச் சென்று வழிபடுவார்கள். மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான மங்கலப் பொருட்கள் வைத்து இறைவனை வழிபடுகின்றனர். புத்தாண்டு திருவிழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள ஏராளமான கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

ஆனால் நடப்பாண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கோவில்களில் திருவிழாக்களுக்கு அரசு தடை விதித்து உள்ளது. ஆனால் கோவில்களில் வழக்கமான பூஜைகள் நடக்கிறது. தரிசனத்துக்கு வரும் பக்தர்களும் கொரோனா விதிகளை பின்பற்றி முககவசம் அணிந்து வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விஷூ கனி காணுதல்

சென்னையில் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், வடபழனி முருகன் கோவில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில், திருவொற்றியூர் தியாகராஜர் சாமி கோவில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் உள்ளிட்ட சென்னையில் உள்ள கோவில்களில் அரசு விதித்துள்ள கொரோனா விதிமுறைகளை பின்பற்றி வழக்கமான பூஜைகள் மட்டும் நடக்கிறது. மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் தமிழ் புத்தாண்டு தோறும் நடக்கும் பஞ்சாங்கம் வாசிப்பு இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. பக்தர்கள் முககவசம் அணிந்து வருவதுடன், கொரோனா விதிகளையும் பின்பற்ற வேண்டும் என்றும் பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

அதேபோல் கோடம்பாக்கத்தில் உள்ள அய்யப்பன், குருவாயூரப்பன் கோவில் காலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அய்யப்பன், குருவாயூரப்பனுக்கு வழக்கமான அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து விஷூ கனிகாணுதல் நிகழ்ச்சி நடக்கிறது. பக்தர்கள் முககவசம் அணிந்து வருபவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். அத்துடன் கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. உடல்வெப்பமும் கண்டறியப்படுகிறது என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

Next Story