பீர்க்கங்காய் சாகுபடி செய்து அசத்தும் விவசாயிகள்
உடுமலை பகுதியில் நிரந்தர பந்தலுக்கு மாற்றாக தற்காலிக பந்தல் அமைத்து பீர்க்கங்காய் சாகுபடி செய்து கூடுதல் மகசூல் பெற்று விவசாயிகள் அசத்தி வருகின்றனர்.
போடிப்பட்டி
உடுமலை பகுதியில் நிரந்தர பந்தலுக்கு மாற்றாக தற்காலிக பந்தல் அமைத்து பீர்க்கங்காய் சாகுபடி செய்து கூடுதல் மகசூல் பெற்று விவசாயிகள் அசத்தி வருகின்றனர்.
காய்கறிகள் சாகுபடி
அன்றாட பயன்பாட்டுக்கான தேவை உள்ள பொருட்கள் என்பதால் காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். பருவநிலை மாற்றம், பூச்சி நோய் தாக்குதல், விலை ஏற்ற இறக்கம், கூலி ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை காய்கறி விவசாயிகள் சந்திக்கின்றனர். ஆனாலும் பெரும்பாலான சூழ்நிலைகளில் விவசாயிகளைக் கைவிடாத பயிராகவே காய்கறிகள் உள்ளது.
இதனால் உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தக்காளி, சின்ன வெங்காயம் கத்தரி வெண்டை மிளகாய் பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். உடுமலை பகுதியில் உணவு தானிய உற்பத்தியை விட காய்கறிகள் சாகுபடியே விவசாயிகளின் விருப்பத் தேர்வாக உள்ளது. ஆனாலும் புடலங்காய், பீர்க்கங்காய் பாகற்காய் அவரைக்காய் கோவைக்காய் உள்ளிட்ட பந்தல் காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை.
பின்னேற்பு மானியம்
பந்தல் அமைப்பதற்கு அதிக அளவில் செலவு பிடிப்பது அதற்கு முக்கிய காரணமாக உள்ளது. கல் தூண்கள் அமைத்து கம்பிகள் மூலம் பந்தல் அமைப்பதற்கு தோட்டக்கலைத்துறை மூலம் மானியம் வழங்கப்பட்டாலும் பெரும்பாலும் பின்னேற்பு மானியமாகவே வழங்கப்படுகிறது.
எனவே விவசாயிகள் பந்தலுக்காக மட்டும் லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டியது உள்ளது. மேலும் விவசாயிகள் கேட்கும் நேரத்தில் திட்டம் செயல்பாட்டில் இருந்தால் மட்டுமே மானியம் கிடைக்கும்.
அதிக மகசூல்
இதனால் ஒருசில விவசாயிகள் பாகற்காய், புடலங்காய் போன்ற பந்தல் காய்கறிகளை தரையிலேயே சாகுபடி செய்கின்றனர். ஆனால் இவ்வாறு தரையில் சாகுபடி செய்யும்போது மகசூல் மிகவும் குறைவாகவே உள்ளது.
இந்த நிலையில் உடுமலை பகுதியில் ஒரு சில விவசாயிகள் குறைந்த செலவில் தற்காலிக பந்தல் அமைத்து பந்தல் காய்கறிகள் சாகுபடி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றுள்ளனர். இதுகுறித்து தற்காலிக பந்தலில் பீர்க்கங்காய் சாகுபடி செய்துள்ள விவசாயி ஒருவர் கூறியதாவது
ஒரு ஏக்கரில் பீர்க்கங்காய் சாகுபடி செய்வதற்கு 600 கிராம் முதல் 800 கிராம் வரை விதைகள் தேவைப்படும். விதைத்து 50 நாட்கள் முதல் 60 நாட்களில் அறுவடை செய்யத்தொடங்கலாம். அதன்பிறகு ஒரு வார இடைவெளி விட்டு 10 முறைக்கு மேல் அறுவடை செய்ய முடியும்.
கல்தூண்கள் அமைத்து பந்தல் அமைப்பதற்குப்பதிலாக சிறிய குச்சிகள் மற்றும் பிளாஸ்டிக் கயிறுகளைப்பயன்படுத்தி தற்காலிக பந்தல் அமைத்து பீர்க்கன் கொடிகளைப்படர விட்டுள்ளோம். இவ்வாறு பந்தல் அமைப்பதன் மூலமும் நிரந்தர பந்தலுக்கு இணையாக அதிக மகசூல் ஈட்ட முடிகிறது. குறைந்த செலவில் ஏக்கருக்கு 6 டன் முதல் 8 டன் வரை மகசூல் பெற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story