போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை
ஊட்டி நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் பேட்டியின்போது கூறினார்.
ஊட்டி
ஊட்டி நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் பேட்டியின்போது கூறினார்.
போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது. இந்த ஆண்டு தற்போது கோடை சீசன் தொடங்கி உள்ளது. கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகின்றனர். ஆனால் ஊட்டி நகரில் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லாததால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஊட்டி ஏ.டி.சி. பகுதியில் உள்ள குதிரை பந்தய மைதான வாகன நிறுத்துமிடத்தை நேற்று போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு எத்தனை வாகனங்கள் நிறுத்த இடம் இருக்கிறது என்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் முக்கிய சந்திப்பு பகுதிகளான ஏ.டி.சி., சேரிங்கிராஸ் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று போலீசாரை அறிவுறுத்தினார்.
கண்காணிப்பு கேமராக்கள்
இதைத்தொடர்ந்து குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க கடைகளில் பொருத்தப்படும் கண்காணிப்பு கேமராக்கள் சாலைகளை நோக்கி இருக்கும் வகையில் உள்ளதா? என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் கூறியதாவது:-
ஊட்டி குதிரை பந்தய மைதான வாகன நிறுத்துமிடம் வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால், அடுத்த மாதம்(மே) 2-ந் தேதிக்கு பிறகு அதிக வாகனங்களை நிறுத்தும் வகையில் வாகன நிறுத்துமிடம் மணல் கொட்டி பொக்லைன் எந்திரம் மூலம் சமன் செய்யப்பட உள்ளது.
வியாபாரிகளுக்கு அறிவுரை
ஊட்டி நகரில் கமர்சியல் சாலை உள்ளிட்ட இடங்களில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், நகராட்சி மூலம் வாகனம் நிறுத்த கட்டணம் வசூலிக்கும் இடம் எங்கெங்கு உள்ளது? என்று ஆய்வு செய்யப்பட்டு முறைப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஊட்டி நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கடைகளில் பொருத்தப்பட்டு உள்ள கேமராக்கள் சாலைகளை நோக்கி இருந்தால் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், அதில் ஈடுபடுபவர்களை கைது செய்யவும் முடியும். இதுகுறித்து வியாபாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ஊட்டி நகரில் பொருத்தப்பட்டு உள்ள அனைத்து கேமராக்களும் ஆய்வு செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.ஆய்வின்போது ஊட்டி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story