கோவில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை நடந்தது.
கூடலூர்
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை நடந்தது.
தமிழ் புத்தாண்டு
சித்திரை முதல் நாளான நேற்று தமிழ் புத்தாண்டு பிறந்தது. இதையொட்டி கூடலூர் பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இங்குள்ள சக்தி விநாயகர், மேல் கூடலூர் சந்தக்கடை மாரியம்மன், நம்பாலக்கோட்டை சிவன்மலை, கம்மாத்தி சிந்தாமணி வாகேஸ்வரி மூகாம்பிகை உள்ளிட்ட கோவில்களில் அதிகாலை 5 மணி முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
மேலும் கூடலூர் பகுதியில் உள்ள மலையாள மொழி பேசும் மக்கள் விஷூ பண்டிகையை கொண்டாடினர். இதையொட்டி அதிகாலையில் வீடுகளில் விளக்கு ஏற்றி காய், கனிகளை வைத்து சாமியை வழிபட்டனர். தொடர்ந்து புத்தாடை அணிந்து மண்வயல் மாதேஸ்வரன், புத்தூர்வயல், பொன்னானியில் உள்ள மகாவிஷ்ணு, மங்குழி பகவதி அம்மன் உள்ளிட்ட கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் கலந்துகொண்டனர்.
முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு கிருமிநாசினி வழங்கப்பட்டு, சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
சீனிவாச பெருமாள்
இதேபோன்று ஊட்டியில் உள்ள கோவில்களில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. ஊட்டி மாரியம்மன் கோவிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முககவசம் அணிந்தும் சாமி தரிசனம் செய்தனர். ஊட்டி சீனிவாச பெருமாள் கோவிலிலும் சிறப்பு பூஜை நடந்தது.
இதில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ததை காண முடிந்தது. எல்க்ஹில் முருகன் கோவில், லோயர் பஜார் சுப்பிரமணிய சுவாமி கோவில், இரட்டை பிள்ளையார் கோவில் உள்பட மற்ற கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
அய்யப்பன் கோவில்
கோத்தகிரி கடைவீதியில் உள்ள அய்யப்பன் கோவிலில் விஷூ பண்டிகையையொட்டி காலை 7 மணி முதல் 10 மணி வரை சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. மேலும் கனி காணுதல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு கைநீட்டமாக நாணயங்கள் வழங்கப்பட்டன.
இதில் ஏராளமான மலையாள மொழி பேசும் மக்கள் கலந்துகொண்டனர். மேலும் கோத்தகிரி பகுதிகளில் உள்ள பல்வேறு கோவில்களில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.
Related Tags :
Next Story