வீரமரணமடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி
வீரமரணமடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி
கோவை
1944-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ந் தேதி மும்பை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கப்பல் தீ விபத்துக்குள்ளானது. இதைத் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் சிலர் மரணம் அடைந்தனர்.
அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 14-ந் தேதி தீத் தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த நாளில் தீ விபத்து மற்றும் மீட்புப்பணிகளில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது.
அதன்படி தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப்பணிகள் துறையின் மேற்கு மண்டலம் சார்பில் கோவை தெற்கு தீயணைப்பு நிலைய வளாகத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்றுக்காலை நடந்தது. இதில் தீயணைப்புத்துறையின் மேற்கு மண்டல இணை இயக்குனர் சத்தியநாராயண் கலந்து கொண்டு வீரமரணம் அடைந்த வீரர்களின் புகைப்படங்களுக்கு மலர் வளையம் வைத்து மவுன அஞ்சலி செலுத்தினார்.
இதில் கோவை மாவட்ட அலுவலர் ஜெகதீஷ், உதவி மாவட்ட அலுவலர்கள் பி.அழகர்சாமி, பாலகிருஷ்ணன், முருகன், நிலைய அலுவலர் வேலுசாமி மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
மேலும் மத்திய அரசின் சார்பில் வருகிற 20-ந் தேதி வரை தீ பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்ப டுகிறது. அதன்படி தீத்தடுப்பு சாதனங்களை முறையாக பராமரிப்பதே தீ விபத்துக்களை தடுப்பதற்கான வழியாகும் என்ற தலைப்பில் தீ பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலர் ஜெகதீஷ் தலைமையில் 12 தீயணைப்பு வீரர்கள் கோவையிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு சைக்கிளில் சென்று விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.
அவர்கள் செல்லும் வழி நெடுகிலும் தீ விபத்துக்களை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தனர்.
இது தவிர பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களான கடை வீதிகள், பஸ் நிலையம் போன்ற இடங்களிலும் அவர்கள் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story