தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு


தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 14 April 2021 10:15 PM IST (Updated: 14 April 2021 10:15 PM IST)
t-max-icont-min-icon

தமிழ் புத்தாண்டையொட்டி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

முருகபவனம்:
தமிழ் புத்தாண்டையொட்டி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெற்றன. 
தமிழ் புத்தாண்டு
தமிழகம் முழுவதும் சித்திரை மாதத்தின் முதல் நாளான நேற்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. தமிழ் புத்தாண்டு அன்று கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில், தமிழ் புத்தாண்டையொட்டி காளகத்தீசுவரர்-ஞானாம்பிகை, பத்மகிரீசுவரர்-அபிராமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து கோவில் மண்டபத்தில் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.
திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவிலில் காலை 7 மணியளவில் சாமிக்கு திருமஞ்சனம், சொர்ண அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து லட்சார்ச்சனையும், மாலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாணமும் நடைபெற்றது.
சிறப்பு அபிஷேகம்
திண்டுக்கல் மலையடிவாரம் அய்யப்பன் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி காலை 4.30 மணி அளவில் கணபதி ஹோமமும், 6 மணி அளவில் சாமிக்கு, ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை உள்பட அனைத்து வகை பழங்களை கொண்டு விசுக்கனி அலங்காரம் நடைபெற்றது. திண்டுக்கல் மலையடிவாரம் பத்ரகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், கனி அலங்காரம், வழிபாடுகள் நடைபெற்றன. 
இதேபோல் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில், மணிக்கூண்டு வெள்ளை விநாயகர் கோவில், நாகல்நகர் ரெயிலடி சித்தி விநாயகர் கோவில், எம்.வி.எம்.நகர் தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், கந்தக்கோட்டம் முருகன் கோவில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
நத்தம்-கன்னிவாடி
நத்தம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. பின்னர் குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவில், பகவதி அம்மன், காளியம்மன் கோவில், திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி கோவில், காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் தமிழ் புத்தாண்டையொட்டி பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.
கன்னிவாடி அருகே தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜை நடைபெற்றது. 

Next Story