வரத்து குறைவால் டோக்கன் கொடுத்து நுங்கு விற்பனை செய்யும் வியாபாரி


வரத்து குறைவால் டோக்கன் கொடுத்து நுங்கு விற்பனை செய்யும் வியாபாரி
x
தினத்தந்தி 14 April 2021 10:32 PM IST (Updated: 14 April 2021 10:32 PM IST)
t-max-icont-min-icon

வரத்து குறைவால் வேலாயுதம்பாளையம் பகுதியில் ேடாக்கன் கொடுத்து நுங்கு விற்பனை செய்யப்படுகிறது.

வேலாயுதம்பாளையம், 

அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே தமிழகத்தில் தற்போது வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக கரூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை காத்துக் கொள்ள கடைகளில் விற்கப்படும் குளிர்பானங்கள், பழச்சாறு, மோர் போன்றவற்றை பொதுமக்கள் வாங்கி குடித்து தாகம் தணித்து வருகின்றனர்.

இவை ஒருபுறம் இருந்தாலும், குளிர்ச்சி தரக்கூடிய இளநீர், நுங்கு போன்றவற்றுக்கு பொதுமக்கள் மத்தியில் மவுசு அதிகரித்து வருகிறது. இதனால், இளநீர், நுங்கு வந்த வேகத்தில் விற்று தீர்ந்து விடுகின்றன.

நுங்கு வாங்க டோக்கன்

கடந்த ஆண்டு நுங்கு வரத்து அதிகமாக இருந்ததால் 3 நுங்கு ரூ.10-க்கு விற்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு அதன் வரத்து குறைந்ததால்,

ஒரு நுங்கு ரூ.10-க்கு விற்கப்படுகிறது. அதனை வாங்கவும் பொதுமக்கள் ஆர்வம் காட்டியதால் அவர்களுக்கு முறையாக வியாபாரிகளால் கொடுக்க முடியவில்லை.

கேரளா, ஆந்திரா போன்ற பிற மாநிலங்களில் இருந்து நுங்கு வரவழைக்கப்பட்டாலும் அதன் தேவைப்பாடு அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. வேலாயுதம்பாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு உள்ள மரத்தடியிலும், புகளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பும் நுங்கு விற்கப்படுகிறது. அங்கு விற்கப்படும் நுங்கு சிறிது நேரத்தில் விற்று தீர்ந்து விடுவதால் நுங்கு வாங்க வரும் பொதுமக்கள் ஏமாற்றம் அடைகிறார்கள். அவர்களை விரக்தியுடன் அனுப்ப விரும்பாத நுங்கு வியாபாரி முருகேசன், அவர்கள் மறுநாள் வந்து வாங்கிக் கொள்ளும் வகையில் டோக்கன் கொடுத்து வருகிறார். அந்த டோக்கனில் எத்தனை ரூபாய்க்கு நுங்கு வேண்டும் என்று கேட்டு குறித்தும் தருகிறார்.

அந்தவகையில் அடுத்த நாள் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நுங்கு கொடுத்து வருகிறார். மேலும், அவர் நுங்கு வாங்க வருபவர்களுக்கு பிளாஸ்டிக் பையில் போட்டு கொடுப்பதில்லை. மாறாக பாத்திரங்கள்,கொண்டு வர வேண்டும் என்றும், அவ்வாறு வரும்போது முககவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும் என்றும் கூறுகிறார். அவரது இந்த பொதுநல சேவையை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

Next Story