தியாகதுருகம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் அல்லல்படும் பொதுமக்கள்


தியாகதுருகம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் அல்லல்படும் பொதுமக்கள்
x
தினத்தந்தி 14 April 2021 10:33 PM IST (Updated: 14 April 2021 10:33 PM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் அல்லல்படும் பொதுமக்கள்

கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம் துணை மின் நிலையத்தில் இருந்து எலவனாசூர்கோட்டை, நாகலூர், ரிஷிவந்தியம், நூரோலை, நிறைமதி, பழையசிறுவங்கூர் ஆகிய பகுதிகளுக்கு மின்சார வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் குறிப்பிட்ட பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் விளைநிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர். அதேபோல் வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரும் பெரும் அவதிப்படுகின்றனர். 

இதுகுறித்து எலவனாசூர்கோட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, மற்ற பகுதிகளை விட எலவனாசூர்கோட்டை பகுதியில் தினமும் 20-க்கும் மேற்பட்ட முறை மின்தடை ஏற்படுகிறது. இதனால் சமையல் செய்ய முடியவில்லை, வியாபாரம் பாதிக்கப்படுகிறது. பொதுத் தேர்வு நெருங்கி வரும் வேளையில் பிள்ளைகள் வீடுகளில் இருந்து படிக்க முடியவில்லை. தற்போது சுட்டெரித்து வரும் வெயிலால் கடும் புழுக்கம் ஏற்பட்டு நிம்மதியாக தூங்கமுடியவில்லை என்றனர். 

இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போது கோடைகாலம் என்பதால் விவசாயிகள் விளை நிலங்களில்மின்மோட்டாரையும், பொதுமக்கள் மின் விசிறி மற்றும் குளிர்சாதன எந்திரங்களையும் (ஏ.சி.) அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இதனால் வழக்கமாக வழங்கப்படும் மின்சாரத்தை விட தேவை அதிகரிக்கும்போது தானாக மின்தடை ஏற்படுகிறது. இதனை சரிசெய்ய பின்னல்வாடி மற்றும் செங்கனாங்கொல்லை பகுதியில் கூடுதலாக புதிய துணை மின்  நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுகிறது என்றார்.

Next Story