கவுமாரியம்மன் கோவில் திருவிழா ரத்து
தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி :
தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற கவுமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
திருவிழாவை காண தேனி மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
இந்த ஆண்டு திருவிழா வருகிற 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்க இருந்தது.
இதற்கிடையே தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து கோவில் திருவிழாவுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்கள் தீச்சட்டி, காவடி, பால்குடம், ஆயிரம் கண்பானை மற்றும் இதர நேர்த்திக்கடன் செலுத்த அனுமதி இல்லை.
தேங்காய், பழம் மற்றும் பால் உள்ளிட்ட அபிஷேக பொருட்கள் கோவிலுக்குள் கொண்டுவரக் கூடாது.
10 வயதுக்கு உட்பட்டவர்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள் கோவிலுக்குள் வருவதை தவிர்க்க வேண்டும்.
பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு அமரக்கூடாது என்று இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story