தளி அருகே பயங்கரம்: 3 மாத கர்ப்பிணி துப்பாக்கியால் சுட்டுக்கொலை மதுபோதையில் தந்தை வெறிச்செயல்


தளி அருகே பயங்கரம்: 3 மாத கர்ப்பிணி துப்பாக்கியால் சுட்டுக்கொலை மதுபோதையில் தந்தை வெறிச்செயல்
x
தினத்தந்தி 14 April 2021 10:48 PM IST (Updated: 14 April 2021 10:52 PM IST)
t-max-icont-min-icon

தளி அருகே மது போதையில் 3 மாத கர்ப்பிணியை தந்தை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தார்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள சூளகுன்டா மாதையன்தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 60). இவரது மனைவி மாதேவி. இவர்களது மகள் வெங்கடலட்சுமி (21). இவருக்கும் கர்நாடக மாநிலம் மாலூரை சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. வெங்கடலட்சுமி தற்போது 3 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இந்த நிலையில் யுகாதி பண்டிகை விருந்துக்காக வெங்கடலட்சுமி, தனது கணவர் சீனிவாசனுடன் நேற்று கரடிக்கல்லில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்தார். பின்னர் சீனிவாசன் வெளியே சென்று விட்டார். அந்த நேரத்தில் மதுபோதையில் வீட்டுக்கு வந்த அருணாச்சலம், தனது மனைவி மாதேவியுடன் தகராறில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவர் மனைவியை தான் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியால் சுட முயன்றார்.

சுட்டுக்கொலை

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மகள் வெங்கடலட்சுமி தனது தாயை காப்பாற்ற குறுக்கே சென்றார். அப்போது அருணாச்சலம் நாட்டுத்துப்பாக்கியால் சுட்டதில் வெங்கடலட்சுமி உடலில் குண்டுகள் பாய்ந்தன. இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார். உடனே அங்கிருந்து அருணாச்சலம் தப்பி ஓடிவிட்டார்.
துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு, கிராம மக்கள், அருணாச்சலம் வீட்டின் முன்பு குவிந்தனர். அப்போது அங்கு குண்டுஅடிப்பட்டு வெங்கடலட்சுமி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் தளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

வலைவீச்சு

அதன்பேரில் தேன்கனிக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கீதா,  இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட வெங்கடலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அருணாசலத்தை வலைவீசி தேடி வருகிறார்கள். மதுபோதையில் கர்ப்பிணி மகளை தந்தையே துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story