தமிழ் புத்தாண்டையொட்டிகோவில்களில் சிறப்பு பூஜை


தமிழ் புத்தாண்டையொட்டிகோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 14 April 2021 10:55 PM IST (Updated: 14 April 2021 10:55 PM IST)
t-max-icont-min-icon

தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் வீடுகளில் கனி வைத்து வழிபட்டனர்.

பொள்ளாச்சி

தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் வீடுகளில் கனி வைத்து வழிபட்டனர்.

கோவில்களில் சிறப்பு பூஜை

தமிழ்புத்தாண்டையொட்டி பொள்ளாச்சி மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் இருக்கும் கோவில்களில்  சிறப்பு பூஜைகள் நடந்தன. 

பொள்ளாச்சி வெங்கடேசா காலனி அய்யப்பன் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. 

இதேபோன்று மாரியம்மன் கோவில், கரிவரதராஜ பெருமாள் கோவில், சுப்பிரமணிய சுவாமி கோவில், பாலக்காடு ரோடு லட்சுமி நரசிம்மர் கோவில், ஆனைமலை மாசாணியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் 

ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதபெருமாள் கோவிலில் பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்பட 9 வகையான அபிஷேகம் நடைபெற்றது. 

அதை தொடர்ந்து ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் மா, வாழை, மாதுளை உள்ளிட்ட பழ வகைகள் வைத்து பூஜை நடந்தது.

 அதை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர். 

விஷூ பண்டிகை

விஷூ பண்டிகையொட்டி பொள்ளாச்சி மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் வசிக்கும் கேரள மக்களின் வீட்டின் பூஜை அறையில் உள்ள கிருஷ்ணர் படத்துக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. 

மேலும் அனைத்து வகையான பழங்கள், பூக்கள், தானிய வகைகள் வைத்து பூஜை செய்து வழிபட்டனர். அதுபோன்று கனிகாணும் நிகழ்ச்சியும் நடந்தது.

 தொடர்ந்து வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கினார்கள். அவர்கள் அனைவருமே கேரள உடை அணிந்து இந்த பண்டிகையை சிறப்பாக கொண்டாடினார்கள். 

நெகமம் 

நெகமம் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் இருக்கும் மாகாளியம்மன் கோவில், வீரமாச்சியம்மன் கோவில், மாயாண்டி ஈஸ்வரர் கோவில், தங்கவேல் அய்யன் கோவில், சின்னண்ணசாமி கோவில், ஆதீஸ்வரர் கோவில், பெருமாள் கோவில், பழனியாண்டவர் கோவில், மாரியம்மன் கோவில் அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. 

சூலக்கல் மாரியம்மன் கோவில் 

பொள்ளாச்சி அருகே உள்ள சூலக்கல் மாரியம்மன் கோவிலில் பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. 

தொடர்ந்து சூலக்கல் மாரியம்மன் தங்கமூலாம் பூசப்பட்ட கவச உடை அலங்காரத்தில், மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 

அதுபோன்று கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவில், கரியகாளியம்மன் கோவில், சிவலோகநாதர் கோவில், மாகாளியம்மன் ஆகிய கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஏரளாமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  

வால்பாறை 

வால்பாறை வாழைத்தோட்டம் அய்யப்பன் சாமி கோவில், சுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடந்தன. 

இதில் ஏராளமான பக்தர்கள் முகக்கவசம் அணிந்து கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  


Next Story