தமிழ்ப் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


தமிழ்ப் புத்தாண்டையொட்டி  கோவில்களில் சிறப்பு வழிபாடு  திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 14 April 2021 11:06 PM IST (Updated: 14 April 2021 11:06 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்ப் புத்தாண்டையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டை:
தமிழ்ப் புத்தாண்டு
தமிழ் மாதங்களில் சித்திரை மாதம் முதல் தேதி தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்ப்புத்தாண்டையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.  கோவில்களில் கொேரானா தடுப்பு நடவடிக்கைகளும் கடைப்பிடிக்கப்பட்டன. கடந்த ஆண்டு (2020) தமிழ்ப்புத்தாண்டையொட்டி கொேரானா ஊரடங்கின் காரணமாக கோவில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த முடியாமல் அவதி அடைந்தனர். இந்த ஆண்டு கொரோனா பரவல் இருந்தாலும் கட்டுப்பாடுகள் தளர்வினால் கோவில்களில் தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்து பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்டன. 
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் கோவிலுக்கு வெளியே வரையும் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.
திரளான பக்தர்கள் தரிசனம்
கோவிலுக்கு வந்த பக்தர்கள் முக கவசம் அணிந்து வந்திருந்தனர். கோவில் நுழைவுவாயிலில் தெர்மல் ஸ்கேனர் கொண்டு பக்தர்களின் உடல் வெப்ப நிலையை சோதனை நடத்தி ஊழியர்கள் அனுப்பினர். பக்தர்கள் வரிசைக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் கோவிலில் நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல புதுக்கோட்டை டவுனில் சாந்தநாத சாமி கோவில், விநாயகர் கோவில்கள், பாலதண்டாயுதபாணி, வரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் தமிழ் புத்தாண்டையொட்டி திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
மணமேல்குடி
மணமேல்குடி அடுத்த பொன்னகரத்தில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 
இதேபோல் மணமேல்குடி உச்சயினி மாகாளியம்மன் கோவில், வடக்கூர் முத்துமாரியம்மன் கோவில், காரக்கோட்டை முத்துமாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
காரையூர், ஆதனக்கோட்டை
காரையூர் அருகே உள்ள மேல தானியத்தில் அடைக்கலங்காத்தார் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அடைக்கலம்காத்தார் மற்றும் பரிவார தெய்வங்களான தொட்டிச்சி அம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கருப்பையா பூசாரி மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
ஆதனக்கோட்டையில் பதினெட்டு முனீஸ்வரர் கோவிலில் உள்ள பதினெட்டுமுனி, மோட்டுமுனி, ஈரல்புடுங்கிமுனி மகாமுனி உள்ளிட்ட சுவாமிகளுக்கு அபிஷேகம், ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விராலிமலை
விராலிமலையில் பிரசித்திபெற்ற முருகன்கோவில் உள்ளது. இங்கு  தமிழ் வருடபிறப்பை முன்னிட்டு முருகன் மற்றும் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்து வெள்ளி கவசம் சாற்றப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கூட்ட நெரிசலை தவிர்க்க கோவில் நிர்வாகம் சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து வந்த பக்தர்கள் சிரமமின்றி நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். 
இதேபோல் விராலிமலை மெய்க்கண்ணுடையாள் அம்மன் மற்றும் சந்தப் பேட்டையில் உள்ள சத்ரு சம்ஹார மூர்த்தி கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கீரமங்கலம்
கீரமங்கலம் மெய்நின்ற நாதசுவாமி கோவில் மற்றும் செரியலூர் தீர்த்தவிநாயகர் கோவில், சேந்தன்குடி நகரம் பாலசுப்பிரமணியர் கோவில், மேற்பனைக்காடு, கொத்தமங்கலம், பனங்குளம் உள்ளிட்ட பல கிராமங்களிலும் உள்ள விநாயகர் கோவில்கள் அம்மன் கோவில்கள், சிவன் கோவில்களில் சித்திரை முதல் நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. குளமங்கலம் பெருங்காரையடி மிண்ட அய்யனார் கோவிலில் சிறப்பு வழிபாடுகளுடன் பிரமாண்ட குதிரை சிலைக்கு காகிதப் பூ மாலைகள் அணிவித்து பக்தர்கள் வழிபட்டுச் சென்றனர்.
திருவரங்குளம்
திருவரங்குளம் பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குளநாதர் கோவில், பிடாரி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் கோவில், திருக்கட்டளை சுந்தரேஸ்வரர் மங்கள நாயகி அம்பாள் கோவில், சுந்தர மாகாளி அம்மன் கோவில், வேப்பங்குடி முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றன.
வடகாடு
வடகாடு அருகேயுள்ள மாங்காடு விடங்கேஸ்வரர் கோவிலில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆலங்குடி
 ஆலங்குடி செட்டி ஊரணி தென்கரையில் பவளவிழா பிள்ளையார்கோவிலில் மாவிளக்கு வைத்து வழிபட்டனர். தர்மசம்வர்த்தினி சமேத நாமபுரீஸ்வரர் கோவிலிலும் கூட்டம் இல்லை. சாமி சன்னதியில் உள்ள நந்தீஸ்வரர் முன்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டன. கல்லாலங்குடி மாரியம்மன், ஆலங்குடி நாடியம்மன் போன்ற கோவில்களிலும் கொரோனா காரணமாக பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது.
கீரனூர், ஆவுடையார்கோவில்
கீரனூர் பகுதிகளிலுள்ள சிவன் கோவில் தேரடி கருப்பு கோவில், ஆஞ்சநேயர் கோவில், கொங்காணிகருப்பர் கோவில், களமாவூர் அக்னீஸ்வரர் கோவில், குளத்தூர் பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவிலில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கீரனூர் தேரடி கருப்பர் சாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 
ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி கோவில், முத்துமாரி அம்மன் கோவில்களில் தமிழ்ப் வருடப்பிறப்பை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நேற்று ஆத்மநாதசுவாமி கோவிலில் தமிழ் பஞ்சாங்கம் பாலு சாஸ்திரிகள் வாசித்து பஞ்சாங் கத்தின் பலன்களை சொன்னார்.

Next Story