தியாகதுருகம் அருகே கழிவுநீர் கால்வாய் அமைத்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
தியாகதுருகம் அருகே கழிவுநீர் கால்வாய் அமைத்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
கண்டாச்சிமங்கலம்
சாலையோரத்தில் கழிவுநீர்
தியாகதுருகம் அருகே அசகளத்தூர் கிராமத்தில் பாவடிதெரு பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கால்வாய் இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையோரத்தில் வழிந்தோடுகிறது.
இந்நிலையில் நேற்று அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் தங்களது வீட்டுக்கு முன்பு கிராவல் மண் கொட்டியதாக தெரிகிறது. இதனால் கழிவு நீர் வழிந்தோட முடியாமல் சாலையில் குட்டையாக தேங்கியது.
சாலை மறியல்
இதனால் ஆத்திரமுற்ற பாவடி தெரு பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் கழிவுநீர் வெளியேற புதிதாக கால்வாய் அமைத்து தரக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அசகளத்தூர்- அடரி சாலை இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த தியாகதுருகம் வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வாசு, பணி மேற்பார்வையாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கழிவு நீர் செல்லும் வழியில் தனிநபரால் கொட்டப்பட்டுள்ள கிராவல் மண்ணை அகற்றி கழிவு நீர் வழிந்தோட உடனடி நடவடிக்கை எடுப்பதோடு, சாலையோரத்தில் வருவாய்த்துறையினர் மூலம் நிலம் அளவீடு செய்து புதிதாக கழிவு நீர் கால்வாய் அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
இதை ஏற்று கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக அசகளத்தூர்-அடரி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story