ஏர் பூட்டி நல்லேர் திருவிழா கொண்டாட்டம்


ஏர் பூட்டி நல்லேர் திருவிழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 14 April 2021 11:40 PM IST (Updated: 14 April 2021 11:40 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்ப்புத்தாண்டையொட்டி ஏர்பூட்டி நல்லேர் திருவிழா கொண்டாடப்பட்டது.

கீழப்பழுவூர்,ஏப்.15-
தமிழ்ப்புத்தாண்டையொட்டி ஏர்பூட்டி நல்லேர் திருவிழா கொண்டாடப்பட்டது.
நல்லேர் திருவிழா
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம்  அரண்மனைகுறிச்சி கிராமத்தில் தமிழ்ப்புத்தாண்டையொட்டி சித்திரை முதல்நாளில் விவசாயிகள் ஒன்றுகூடி ஏர்ஓட்டி நல்லேர் திருவிழா கொண்டாடினர். விழாவில் ஏர்கலப்பை பூட்டிய மாடுகளும், டிராக்டர்களும் ஒன்றாக அணிவகுத்து விளைநிலத்தில் ஏர்ஓட்டப்பட்டது.
முன்னதாக விவசாயிகள் அதிகாலையில் வீடுகள் மற்றும் வேளாண் உபகரணங்களை சுத்தம் செய்தும், மாடுகளை குளிப்பாட்டியும், கலப்பையுடன் விவசாய நிலத்தில் ஒன்றுகூடினர்.
வயலில் உழவு
பின்னர்  கலப்பை, மேழி, கொழு, கயிறு, தார்க்குச்சி மட்டுமின்றி மாடுகளுக்கும் மஞ்சள், சந்தனம் பூசி, பூச்சூடி, மாலை அணிவிக்கப்பட்டது. நிலத்தின் வடகிழக்குப்பகுதியில், நாழி நிறைய நெல் வைத்து, தேங்காய், பழம், சந்தனத்துடன் சூரியனை நோக்கி விவசாயிகள் வணங்கி பிரார்த்தனை செய்தனர்.
இதனையடுத்து வயலில் நல்லேர் எனப்படும் உழவுத்திருநாள் நடைபெற்றது. மாடுகள் மற்றும் டிராக்டர்கள் கொண்டு வயலில் உழவு செய்யப்பட்டது. பின்னர் படையலில் வைத்த முனை தீட்டாத பச்சரிசி, பனை வெல்லம், பொட்டுக்கடலை சேர்த்த காப்பரிசியை விவசாயிகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
திருவிழாவின் முக்கியத்துவம்
சித்திரை மாத உழவு பத்தரை மாத்துத் தங்கம் என்பார்கள். நல்லேர் பூட்டினால்தான் விளைச்சல், அறுவடை நன்றாக இருக்கும் என்பது மருதநில மக்களின் நம்பிக்கை. கோடை உழவு செய்வதால், இறுகலான மண் பொல பொலப்பாகிவிடும். காற்றோட்டம் கிடைப்பதால் மண்ணில் நன்மை பயக்கும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஊட்டச்சத்துகள் எளிதாக கிடைக்கிறது. உழவுசால்கள் மழைநீரின் ஈரப்பதத்தை தக்க வைக்கின்றன. மண்ணரிப்பு தடுக்கப்பட்டு, வளம் பாதுகாக்கப்படும். புழு, பூச்சிகள், களைசெடிகள் அழியும் என்று நல்லேர் திருவிழாவின் அறிவியல் முக்கியத்துவத்தை வேளாண் நிபுணர்கள் எடுத்துரைக்கின்றனர்.
பண்டைய தமிழர்களின் பண்பாடும் பண்டிகையும் மக்களின் வாழ்வியலோடு கலந்ததாகவே உள்ளன என்பதை பறைசாற்றும் வகையில் பழமையும், புதுமையும் கலந்து மாடுகள் மற்றும் டிராக்டர்கள் கொண்டு வருடந்தோறும் நடத்தப்படும் நல்லேர் திருவிழா  விவசாயிகளிடம் ஒவ்வொரு வருடமும் நம்பிக்கை உருவாக்கி உழவுத்தொழிலை
காப்பாற்றி வருகிறது என்பதில் ஐய்யம் இல்லை. இந்த நல்லேர் திருவிழாவில் விவசாயிகள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.

Next Story