மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது


மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது
x
தினத்தந்தி 14 April 2021 11:56 PM IST (Updated: 14 April 2021 11:56 PM IST)
t-max-icont-min-icon

நாகையில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதால் 2 ஆயிரம் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை.

நாகப்பட்டினம்;
நாகையில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியதால் 2 ஆயிரம் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. 
மீன்பிடி தடைக்காலம்
மீன்களின் இனப்பெருக்கத்துக்காக மீனவ கிராமங்களில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவு முதல் தொடங்கியது. 
இதனால் நாகை மாவட்டத்தில் கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, கல்லார், செருதூர், நாகூர் உள்ளிட்ட 64 மீனவ கிராமங்களை சேர்ந்த  விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதையடுத்து நாகை மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகளை கரையில் நிறுத்தும் பணியில் மீனவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் நாட்டுப்படகு மீனவர்கள் வழக்கம் போல கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவார்கள். விசைப்படகுகள் கடலுக்கு செல்லாததால் நாகையில் மீன்வரத்து குறையும். மேலும் மீன்பிடி தொழில் மற்றும் அதை சார்ந்த பிற தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கு வருமான இழப்பு ஏற்படும். 
ரூ.10 ஆயிரம்
61 நாட்களுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருக்கும் விசைப்படகு மீனவர்கள் தங்களது படகுகளில் பழுது நீக்குதல், வலைகளை சீரமைத்தல் போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபடுவார்கள். இந்த காலத்தில் மீனவர்களுக்கு தமிழக அரசு சார்பில் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்குகிறது. இந்த நிவாரண தொகை போதுமானதாக இல்லை என தெரிவித்துள்ள நாகை மீனவர்கள், மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையை தமிழக அரசு ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்்கை விடுத்துள்ளனர். 
மேலும் விசைப்படகு மற்றும் வலைகளை சீரமைக்க தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் ரூ.5 லட்சம் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story