சித்திரை விசு திருவிழாவுக்கு தடை: பாபநாசம் கோவில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடியது
கொரோனா பரவல் எதிரொலியாக பாபநாசம் கோவிலில் சித்திரை விசு திருவிழாவுக்கு தடை விதிக்கப்பட்டதால் கோவில் வளாகம் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
விக்கிரமசிங்கபுரம்:
கொரோனா பரவல் எதிரொலியாக பாபநாசம் கோவிலில் சித்திரை விசு திருவிழாவுக்கு தடை விதிக்கப்பட்டதால் கோவில் வளாகம் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
பாபவிநாசர் கோவில்
நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆன்மிக தலமான பாபநாசம் உலகாம்பிகை சமேத பாபவிநாசர் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை விசு திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த விழாவிற்கு பல்வேறு இடங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து, தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி இறைவனை தரிசனம் செய்வார்கள்.
கடந்த 5-ந் தேதி இக்கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதே நேரத்தில் கொேரானா பரவலின் வேகமும் ஆரம்பமாகியது. எனவே கடந்த ஆண்டு போலவே இந்த வருடமும் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக சித்திரை விசு விழா அரசால் தடை செய்யப்பட்டது. ஆனால் ஆகம விதிப்படி கோவிலில் பூஜைகள் நடைபெற்றது.
வெறிச்சோடின
10-ம் திருநாளான தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்த தடையால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை இன்றி கோவில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் ஆற்றில் குளிப்பவர்களின் கூட்டத்தை குறைப்பதற்காக அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.
கோவிலை சுற்றி தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தது. கோவிலுக்கு வருவதற்கு சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு முன்பே ஆங்காங்கே போலீசாரால் தடுப்பு வேலி அமைத்து, கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் மற்றும் தாமிரபரணி ஆற்றில் குளிக்க வந்தவர்களை திருப்பி அனுப்பினர்.
இந்த தடையால் பக்தர்கள் தற்போது இரண்டாவது வருடமாக இந்த திருவிழாவை காண முடியாமல் வேதனை அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story