ஒரே நாளில் 3 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழாவை முன்னிட்டு முதல் நாளில் மதுரையில் 3 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது
மதுரை
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழாவை முன்னிட்டு முதல் நாளில் மதுரையில் 3 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜனவரி 16-ந்தேதி மதுரையில் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயது முதல் 59 வயது வரை உள்ள இணை நோயாளிகள் ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்தநிலையில் இணை நோய்கள் அல்லாத 45 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. கொரோனாவின் 2-வது அலையை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் நேற்று முதல் 16-ந்தேதி வரை 3 நாட்களுக்கு தடுப்பூசி திருவிழா நடக்கிறது. மதுரையிலும் இதற்காக பல்வேறு சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு தகுதியுள்ள நபர்கள் ஆர்வமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
207 மையங்கள்
இதுகுறித்து மதுரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அர்ஜூன்குமார் கூறுகையில், கொரோனா தடுப்பூசி போடுவதற்காக மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியில் 207 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்கள், மினிகிளினிக், அரசு ஆஸ்பத்திரிகள் என 153 இடங்களிலும், 54 தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடும் பணி நடக்கிறது. நேற்று தடுப்பூசி திருவிழாவின் முதல் நாள் என்பதால் 3 ஆயிரத்து 59 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதற்காக தன்னார்வலர்கள் மூலம் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டத்தை பொறுத்தவரையில் இதுவரை முதல் கட்டம், 2-ம் கட்டம் என சேர்த்து 1 லட்சத்து 66 ஆயிரத்து 620 பேர் தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்கள். தடுப்பூசி திருவிழாவை பயன்படுத்தி தகுதி உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்பினால், அவர்கள் அருகில் உள்ள மையங்களுக்கு சென்று ஆதார் கார்டு உள்ளிட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையை காண்பித்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் எந்த பாதிப்பும் ஏற்பட போவதில்லை. எனவே தைரியமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story