‘வீடுகட்ட பணம் வாங்கி வா' என்று கூறி பெண் போலீசை அடித்து உதைத்த கணவர் கைது
‘வீடுகட்ட பணம் வாங்கி வா' என்று கூறி பெண் போலீசை அடித்து உதைத்ததாக கணவரை போலீசார் கைது செய்தனர்.
பெருந்துறை
‘வீடுகட்ட பணம் வாங்கி வா' என்று கூறி பெண் போலீசை அடித்து உதைத்ததாக கணவரை போலீசார் கைது செய்தனர்.
முகநூல் காதல்
மதுரை மாவட்டம் கீழ்கருவானூர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கலட்சுமி (வயது 22). பெண் போலீசான இவர் தற்போது ஈரோடு மாவட்டம் பவானி போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தங்கலட்சுமிக்கும், காஞ்சிக்கோவில் விருப்பம்பதியைச் சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரியான பரணீதரன் என்கிற கவிராஜூக்கும் முகநூல் மூலம் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் 25-ந் தேதி பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்கள்.
வீடுகட்ட பணம்
இந்தநிலையில் கடந்த 4-ந் தேதி, தங்கலட்சுமி காஞ்சிக்கோவில் விருப்பம்பதியிலுள்ள கணவர் பரணீதரன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் தங்கலட்சுமி காஞ்சிக்கோவில் போலீசில் கணவர் பரணீதரன் மீது புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
என்னுடைய கணவர் பரணீதரன், வீடு கட்டுவதற்காக ரூ.25 லட்சம் தேவைப்படுகிறது. அதை முதலில் கொண்டு வா. பிறகு கணவன்-மனைவியாக வாழலாம் என்று கூறி அடித்து உதைக்கிறார். தரக்குறைவாக பேசுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறி இருந்தார்.
சிறையில் அடைப்பு
இதைத்தொடர்ந்து தங்கலட்சுமியின் புகாரின்பேரில் காஞ்சிக்கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து, பரணீதரனை கைது செய்தார். பின்னர் கொடுமுடி முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பரணீதரன் ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story