தேவூர் அருகே, தண்ணீர் குழாய் அமைக்க பாறைகளை வெடிவைத்து தகர்க்க கிராம மக்கள் எதிர்ப்பு
பாறைகளை வெடிவைத்து தகர்க்க கிராம மக்கள் எதிர்ப்பு
தேவூர்:
தேவூர் அருகே தண்ணீர் குழாய் அமைக்க பாறைகளை வெடி வைத்து தகர்க்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் பொக்லைன் எந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
காவிரி தண்ணீர்
தேவூர் அருகே புள்ளாகவுண்டம்பட்டி ஊராட்சி சீரங்க கவுண்டம்பாளையம் பகுதியில் சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தனி நபர்கள் 7 பேர் விவசாய நிலத்திற்கு காவிரி ஆற்று தண்ணீர் கொண்டு செல்ல அரசு அனுமதி பெற்று குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக புள்ளாக்கவுண்டம்பட்டி அக்ரஹாரம் ஊராட்சி காவிரி ஆற்றங்கரைபகுதியில் ஊராட்சிக்கோட்டை மின் திட்டத்தில் மின்சார வாரியத்திற்கு சொந்தமான நிலத்தில் அனுமதி பெறாமல் தண்ணீர் குழாய் அமைத்து வருவதாக கூறி அந்த பகுதி கிராம மக்கள், விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஊராட்சிக்கோட்டை மின்திட்ட செயற்பொறியாளர் ரவிச்சந்திரனிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர். இது ெதாடர்பாக மின் திட்ட அதிகாரிகள் நடத்திய விசாரணையில் 7 தனி நபர்கள் மின்வாரியத்திற்கு அருகில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் மட்டும் குழாய் பதிக்க அனுமதி பெற்றுள்ளதும், மின்வாரியத்திடம் அனுமதி பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.
முற்றுகை போராட்டம்
நேற்று காலையில் தனி நபர்கள் 7 பேரும் தாங்கள் அனுமதி பெற்ற பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் பொக்லைன் எந்திரத்தை வைத்து குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பொக்லைன் எந்திரத்தை பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், பொதுப்பணித்துறையில் தனி நபர்கள் பெற்ற ஆணையை காண்பிக்க வலியுறுத்தினர். மேலும் ஆற்றுப்படுகையில் பாறைகளை வெடி வைத்து தகர்க்கக்கூடாது என எதிர்ப்பும் தெரிவித்தனர்.
பேச்சுவார்த்தை
இதையடுத்து சங்ககிரி துணை தாசில்தார் ஜெயக்குமார், புள்ளாக் கவுண்டம்பட்டி அக்ரஹாரம் ஊராட்சி கிராம நிர்வாக அலுவலர் மலர், புள்ளாக்கவுண்டம்பட்டி ஊராட்சி கிராம நிர்வாக அலுவலர் அருள்முருகன் ஆகியோர் தேவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜுனன் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அந்த தனி நபர்கள் பொதுப்பணித்துறையில் பெற்ற ஆணையை காண்பித்தனர். பின்பு காவிரி ஆற்றங்கரையில் உள்ள பாறைகளை வெடி வைத்து தகர்க்க கூடாது, அதை வெடி வைத்து தகர்க்காத வகையில் பார்த்து கொள்கிறோம் என வருவாய்த்துறையினர் உறுதி அளித்தனர். அதன்பேரில் கிராமப்புற விவசாயிகள் கலைந்து சென்றனர். கிராம மக்களின் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story