வியாபாரி கொலை வழக்கில் சிறை சென்றவர்: ஜாமீனில் வெளிவந்த பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை


வியாபாரி கொலை வழக்கில் சிறை சென்றவர்: ஜாமீனில் வெளிவந்த பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 15 April 2021 6:19 AM IST (Updated: 15 April 2021 6:19 AM IST)
t-max-icont-min-icon

கற்பூர வியாபாரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

திருவொற்றியூர், 

சென்னை திருவொற்றியூர் சாத்துமா நகர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகள் பவித்ரா (வயது 24). பட்டதாரி. இவர் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருவொற்றியூர் சாத்துமா நகர் மேட்டு தெருவைச் சேர்ந்த கற்பூர வியாபாரியான அம்மன் சேகர் (60) என்பவரை கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த பவித்ரா வீட்டில் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். மேலும் தந்தை பாஸ்கர் கல்லீரல் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால் மதிய வேளையில் பவித்ராவின் தாயார் சாப்பாடு எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்று விடுவார். பவித்ராவின் அண்ணன் அரவின் வேலைக்கு சென்று விடுவார். வீட்டில் பவித்ரா மட்டும் தனிமையில் இருப்பார்.

இந்த நிலையில் நேற்று பவித்ரா மன உளைச்சலில் வீட்டில் இருந்த போது, தனது துப்பட்டாவால் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இது குறித்து தகவலறிந்த திருவொற்றியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பவித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே பவித்ரா தான் கைப்பட எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில், தான் சிறைக்கு சென்று வந்ததால் ஏற்பட்ட மன அழுத்தத்திலும், தனது தந்தை உடல் நிலை குறித்து மன உளைச்சலுக்கு ஆளானதால் தான் தற்கொலை செய்து கொள்வதாக கடிதத்தில் எழுதியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story