குமாரபாளையம் அருகே சிறுமி பலாத்கார வழக்கில் தாயும் கைது
குமாரபாளையம் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தாயும் கைது செய்யப்பட்டார்.
எலச்சிபாளையம்,
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே வட்டமலை குள்ளங்காடு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளிக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் 3-வது மகளான 14 வயது சிறுமி தனது மூத்த அக்காள் வீட்டில் இருந்தபோது, அவரை அக்காள் கணவர் சின்ராஜ் பாலியல் பலாத்காரம் செய்தார். இதையடுத்து சின்ராஜின் நண்பர்கள் கோபி, குமார் என்கிற செந்தில்குமார் ஆகியோர் சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்தனர்.
பின்னர் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணிபுரியும் இளநிலை என்ஜினீயர் கண்ணன் என்பவர், அவரது வீட்டில் சிறுமி வேலை செய்தபோது பலாத்காரம் செய்தார். இதுகுறித்து அறிந்த கண்ணன் வீட்டில் வேலை செய்யும் பன்னீர், மூர்த்தி, நாய் சேகர், அபிமன்யு, வடிவேல், முருகன், சரவணன், சங்கர் ஆகிய 8 பேர் சிறுமியை மிரட்டி கடந்த சில மாதங்களாக பலாத்காரம் செய்து வந்தனர்.
இந்தநிலையில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்த சிறுமி தனது அக்காவிடம் கூறி கதறி அழுதார். பின்னர் இதுகுறித்து அறிந்த மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ரஞ்சித பிரியா விசாரணை நடத்தினார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அவர் திருச்செங்கோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி சிறுமியை பலாத்காரம் செய்ததாக 12 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சின்ராஜ், கண்ணன் உள்பட 11 பேரை கைது செய்தனர்.
மேலும் தலைமறைவான முருகன் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்தநிலையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய உடந்தையாக இருந்ததாக சிறுமியின் தாயை நேற்று போலீசார் கைது செய்தனர். பின்னர் கைதான தாய் உள்பட 12 பேரும் நாமக்கல் மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து நீதிபதி 12 பேரையும் சேலம் மத்திய சிறையில் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். சிறுமி பலாத்கார வழக்கில் தாயும் கைது செய்யப்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story