தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி


தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 15 April 2021 7:41 PM IST (Updated: 15 April 2021 7:41 PM IST)
t-max-icont-min-icon

தேயிலை தோட்டங்கள், தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

ஊட்டி

தேயிலை தோட்டங்கள், தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

தடுப்பூசி திருவிழா

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 2 வாரத்துக்குள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்துபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், இதுகுறித்து மக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தடுப்பூசி திருவிழா தொடங்கி உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், பந்தலூர், கூடலூர் ஆகிய 6 அரசு மருத்துவமனைகள், 33 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தாமாக முன்வந்து புகைப்படத்துடன் கூடிய ஆதார் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

சிறப்பு முகாம்

இங்கு தனியார் தேயிலை தொழிற்சாலைகள் உள்பட 199 தொழிற்சாலைகள் உள்ளன. இதில் 23 ஆயிரத்து 483 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதிகம் பேர் பணிபுரிவதால், கொரோனா பரவும் அபாயம் உள்ளது. இதை கருத்தில் கொண்டு தொழிற்சாலைகளில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி கூறியதாவது:- நீலகிரியில் கடந்த 11-ந் தேதி முதல் தடுப்பூசி திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. அன்றைய தினம் 2,700 பேர், 12-ந் தேதி 3,500 பேர், 13-ந் தேதி 4,200 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதுவரை 96 ஆயிரத்து 374 பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர்.

16 வாகனங்கள்

தற்போது கட்டுமான தொழிலாளர்கள், தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளுக்கு முகாம் நடத்தி தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 16  வாகனங்களில் தேயிலை தோட்டம் மற்றும் கிராமப்புறங்களுக்கு சுகாதாரத்துறையினர் சென்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று 45 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நகர்ப்புறம் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களில் இருந்தும் பொதுமக்கள் வந்து இருந்தனர். அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டு அனுப்பப்பட்டனர்.


Next Story