கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் பேரூராட்சி செயல் அலுவலருக்கு தொற்று உறுதி


கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் பேரூராட்சி செயல் அலுவலருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 15 April 2021 10:34 PM IST (Updated: 15 April 2021 10:34 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. தியாகதுருகம் பேரூராட்சி செயல் அலுவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி

5 ஆசிரியைகளுக்கு

தற்போது கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்  மாணவிகளுக்கு பாடம் நடத்திய 5 ஆசிரியைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது மாணவிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து பள்ளி வளாகத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் ஆசிரியர், ஆசிரியைகள் உள்பட 30 பேரின் உமிழ்நீர் மாதிரியை சுகாதாரத்துறை ஊழியர்கள் சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

பேரூராட்சி அலுவலருக்கு தொற்று

இந்நிலையில் தியாகதுருகம் பேரூராட்சி செயல் அலுவலராக பணிபுரிந்து வருபவர் மல்லிகா(வயது 58). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சளி, இருமல் இருந்தது. இதையடுத்து தியாகதுருகம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மல்லிகாவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் உள்ள தனது வீட்டில் மல்லிகா தனிமைப்படுத்திக் கொண்டார். இதற்கிடையே பேரூராட்சி செயல் அலுவலருடன் நேரடி தொடர்பில் இருந்த 29 பேருக்கு நேற்று தியாகதுருகம் மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  

கடந்த சில வாரங்களில் தியாகதுருகம் பகுதியில் உள்ள வடதொரசலூர், ஈய்யனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 6 பேர் கள்ளக்குறிச்சி அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 17 பேர் தங்களது வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டனர். வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட கொரோனா நோயாளிகளை அந்தந்த பகுதியை சேர்ந்த சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார செவிலியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Next Story