3 வயது குட்டி யானை சாவு


3 வயது குட்டி யானை சாவு
x
தினத்தந்தி 15 April 2021 11:51 PM IST (Updated: 15 April 2021 11:51 PM IST)
t-max-icont-min-icon

சிறுமுகை வனப்பகுதியில் 3 வயது குட்டி யானை உயிரிழந்தது.

மேட்டுப்பாளையம்

சிறுமுகை வனப்பகுதியில் 3 வயது குட்டி யானை உயிரிழந்தது. 

குட்டி யானை சாவு 

கோவை வனக்கோட்டம் சிறுமுகை வனச்சரகத்துக்கு உட்பட்ட உளியூர் பீட் பெத்திக்குட்டை பிரிவில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது வனப்பகுதியில் ஒரு குட்டி யானை இறந்து கிடப்பதை கண்டுபிடித்தனர். 

இதையடுத்து மாவட்ட வன அதிகாரி வெங்கடேஷ் உத்தரவின்பேரில் உதவி வனபாதுகாவலர் செந்தில்குமார் தலைமையில் வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பிரேத பரிசோதனை 

பின்னர் அவர்கள் இறந்து கிடந்த குட்டி யானையை ஆய்வு செய்தபோது, அதற்கு 3 வயது இருக்கும் என்பது தெரியவந்தது. பின்னர் வனத்துறை கால்நடை மருத்துவர் சுகுமாறன் தலைமையில் மருத்துவக்குழுவினர் அந்த குட்டி யானை உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.

குட்டி யானை உடல் கிடந்த இடம் அடர்ந்த வனப்பகுதி என்பதால் அதன் உடலை பிற வனவிலங்குகள் உணவுக்காக அங்கேயே விட்டனர். 

இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:- 

உள்காயங்கள் 

இறந்த குட்டி யானையின் வலதுபுறம் மார்பக விலா எலும்பு கூடு மேற்பகுதி மற்றும் வயிறு பகுதியில் உள்காயங்களுக்கான அறிகுறிகள் இருந்தன. மேலும் நுரையீரல், இதயம் அதிகமாக சிவந்து காணப்பட்டது. வயிற்றில் உணவு ஜீரணமாகாமல் இருந்தது. 

இதை வைத்து பார்க்கும்போது வேறு யானை தாக்கியதால் அடிபட்டு இருக்கவோ அல்லது பள்ளத்தில் சரிவில் தலைகீழாக விழுந்ததில் காயம் ஏற்பட்டு இறந்து இருக்கலாம். 

இருந்தபோதிலும் உடற்கூறுகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 


Next Story