கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை
கொரோனா பரவலை கண்காணிக்க சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது என கலெக்டர் மதுசூதன் ரெட்டி கூறினார்
சிவகங்கை
கொரோனா பரவலை கண்காணிக்க சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது என கலெக்டர் மதுசூதன் ரெட்டி கூறினார்.
கட்டுப்பாட்டு அறை
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தொற்று தடுப்பிற்கான கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. நேற்று இந்த அறையை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். கட்டுப்பாட்டு அறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பதிவேடுகளை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
தற்போது கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்களுக்கு எந்தவகையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு குறைக்க முடியுமோ அந்த அளவிற்கு மருத்துவத்துறையினருடன் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு ஏதுவாக கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மருத்துவர்கள் தலைமையிலான குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இப்பணியில் உள்ள மருத்துவ அலுவலர்கள் கட்டுப்பாட்டு அறையிலிருந்து நாள்தோறும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிறப்பு மருத்துவ முகாம்கள் மற்றும் அரசு அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு மேற்கொள்ளும் கொரோனா தொற்று பரிசோதனை குறித்து பதிவு செய்து கண்காணிப்பதுடன், மேலும் பரிசோதனை முடிவில் எத்தனை நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என்பது குறித்து பதிவு செய்வார்கள் அதில் எத்தனை பேர் அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள், எத்தனைபேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்ற விவரத்தையம் கண்காணிப்பார்கள்.
கண்காணிக்கப்படும்
மேலும், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வெளி மாவட்டங்களுக்கு சென்ற நிலையில் அங்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்களா என்ற விவரமும் பதிவு செய்ததுடன் அதுபோல் சிகிச்சை பெற்றால் எப்போது குணமடைந்து சொந்த ஊருக்கு வருகிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. நோய்த்தொற்று உள்ள நபர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஒரே வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் இருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் வசிக்கும் பகுதியினை கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்து அங்கு பொதுமக்கள் அதிக அளவில் செல்லாத வகையிலும், வெளி ஆட்கள் செல்லாத வகையிலும் தடுத்து சுகாதாரத்துறையின் மூலம் கண்காணித்து வருவதை கட்டுபாட்டு அறையிலிருந்து கண்காணிக்கபடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் லதா, வருவாய் கோட்டாட்சியர் முத்துக்கழுவன், கலெக்டரின் நோ்முக உதவியாளர்(பொது) ரத்தினவேல், மருத்துவ அலுவலர் அரவிந்த் ஆதவன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story