கொரோனா தடுப்பு கண்காணிப்பு அதிகாரி ககன்தீப்சிங் பேடி ஆய்வு


கொரோனா தடுப்பு கண்காணிப்பு அதிகாரி ககன்தீப்சிங் பேடி ஆய்வு
x
தினத்தந்தி 16 April 2021 12:07 AM IST (Updated: 16 April 2021 12:07 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு கண்காணிப்பு அதிகாரி ககன்தீப்சிங் பேடி ஆய்வு மேற்கொண்டார்.

விருத்தாசலம், 

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க  மாவட்டம் தோறும் முதன்மை செயலர் அந்தஸ்தில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை சிறப்பு  கண்காணிப்புஅதிகாரிகளாக தமிழக அரசு நியமித்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்திற்கு கொரோனா தடுப்பு கண்காணிப்பு அதிகாரியாக வேளாண்மை துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி நியமிக்கப்பட்டுள்ளார். 
இந்த நிலையில் அவர் நேற்று விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்தார். பின்னர் அவர் அங்கு திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கிருந்த டாக்டர்களிடம், மருத்துவமனையில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 
இது வரை எத்தனை பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர் என்பது குறித்த விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- 
கொரோனா தொற்று தற்போது எல்லா மாநிலங்களிலும் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க பொதுமக்கள் அனைவரும் எப்போதும் முககவசம் அணிய வேண்டும். முக கவசம் அணியாமல் யாரும் வெளியில் செல்லக்கூடாது. ஒரு சிலர் முககவசம் இல்லாமல் செல்கின்றனர். 

உயிருக்கு ஆபத்து

அவ்வாறு யாரும் செல்லக்கூடாது. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். சளி, காய்ச்சல் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். சுயமாக மருந்துகளை எடுத்துகொள்ளக்கூடாது. சிகிச்சைக்கு தாமதிக்கும் போது நுரையீரலை நோய் பாதித்து உயிருக்கு ஆபத்து ஏற்படும். 
அதனால் அருகில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

அரசு பஸ்

தொடர்ந்து அவர் விருத்தாசலம் கடைவீதி பாலக்கரை பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு முக கவசம் அணியாமல் நடந்து சென்றவர்களிடம், கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தினார். 
மேலும் அந்த வழியாக வந்த ஒரு அரசு பஸ்சில் ஏறிய ககன்தீப்சிங் பேடி, பஸ்சில் முக கவசம் அணியாமல் வந்த பயணிகளிடம் முககவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தினார். அப்போது கலெக்ர் சந்திரசேகர் சாகமூரி,  விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரவீன்குமார், தாசில்தார் சிவக்குமார், டாக்டர்கள் எழில், குலோத்துங்கன், சாமிநாதன் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். 

Next Story