பலியான 2 குமரி மீனவர்களின் உடல்கள் சொந்த ஊர் வந்தது


பலியான 2 குமரி மீனவர்களின் உடல்கள் சொந்த ஊர் வந்தது
x
தினத்தந்தி 16 April 2021 12:08 AM IST (Updated: 16 April 2021 12:08 AM IST)
t-max-icont-min-icon

ஆழ்கடலில் படகு மீது கப்பல் மோதிய விபத்தில் பலியான 2 குமரி மீனவர்களின் உடல்கள் சொந்த ஊர் வந்தது. அவர்களின் உடலுக்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

குளச்சல், 
ஆழ்கடலில் படகு மீது கப்பல் மோதிய விபத்தில் பலியான 2 குமரி மீனவர்களின் உடல்கள் சொந்த ஊர் வந்தது. அவர்களின் உடலுக்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். 
கப்பல் மோதல்
குளச்சல் துறைமுக தெருவை சேர்ந்தவர் ஹென்லின் அலெக்சாண்டர் (வயது 38). இவருடைய மாமனார் தாசன் (60). இவர்கள் இருவரும் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வேப்பூர் பகுதியில் ஜாபர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 11-ந்தேதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.இவர்கள் இருவரையும் சேர்த்து 7 தமிழக மீனவர்கள், மேற்கு வங்காளத்தை சேர்ந்த 7 மீனவர்கள் என 14 பேர் படகில் இருந்தனர். 12-ந் தேதி நள்ளிரவு கேரள-கர்நாடகா எல்லையான மங்களூருவில் இருந்து 55 நாட்டிக்கல் தொலைவில் ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற சிங்கப்பூர் சரக்கு கப்பல் ஒன்று எதிர்பாராத விதமாக விசைப்படகு மீது மோதியது. 
3 மீனவர்கள் சாவு
இதில், படகு கவிழ்ந்து மீனவர்கள் அனைவரும் கடலில் தூக்கி வீசப்பட்டனர். குளச்சலை சேர்ந்த ஹென்லின் அலெக்சாண்டர், அவருடைய மாமா தாசன் மற்றும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த மாணிக்தாஸ் ஆகியோர் பிணமாக மீட்கப்பட்டனர். ராமநாதபுரத்தை சேர்ந்த வேல்முருகன், மேற்கு வங்காளத்தை சேர்ந்த சுனில்தாஸ் ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்டு மங்களூரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். 
மற்ற மீனவர்களான தூத்துக்குடியை சேர்ந்த டென்சன், ராமநாதபுரத்தை சேர்ந்த மாணிக்கவேலு, பாலமுருகன், பழனி மற்றும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த 5 பேர் என மொத்தம் 9 பேர் மாயமானார்கள். அவர்களை கடலோர காவல் படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
உடல்கள் வந்தது
பலியான குளச்சல் மீனவர்கள் ஹென்லின் அலெக்சாண்டர், தாசன் ஆகியோரது உடல்கள் நேற்று முன்தினம் மங்களூரு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைதொடர்ந்து நேற்று காலை இருவரின் உடல்களும் சொந்த ஊரான குளச்சலுக்கு கொண்டு வரப்பட்டது. உடல்களை பார்த்ததும் உறவினர்கள் கதறி அழுதது, காண்போரின் நெஞ்சையும் கலங்க செய்தது.
அரசியல் கட்சியினர் அஞ்சலி
மீனவர்களின் உடல்கள் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் விஜய்வசந்த், எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், பிரின்ஸ் மற்றும் பொது மக்கள் மீனவர்களின் உடல்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், 11 மணிக்கு புனித காணிக்கை அன்னை ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு, உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது. பலியான ஹென்லின் அலெக்சாண்டருக்கு சுமதி (32) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். சுமதியின் தந்தை தான் தாசன். இந்த விபத்தில் சுமதி தனது தந்தையையும், கணவரையும் இழந்துள்ளார். ஆழ்கடலில் விசைப்படகு மீது கப்பல் மோதிய விபத்தில் மீனவர்கள் பலியான சம்பவத்தால் குளச்சல் பகுதியில் மீனவ கிராமங்கள் சோகத்தில் மூழ்கியது. 

Next Story