திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் திருமணம் நடத்த தடை விதிப்பு


திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் திருமணம் நடத்த தடை விதிப்பு
x
தினத்தந்தி 16 April 2021 12:31 AM IST (Updated: 16 April 2021 12:31 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் திருமணம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லிக்குப்பம்,

கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்ற தேவநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு கடலூர் மாவட்டம் மட்டுமின்றி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி மாநிலத்தில் இருந்தும் தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.
மேலும் முகூர்த்த நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கடந்த ஜனவரி மாதம் வரை கோவிலில் திருமணம் நடைபெறாமல் இருந்தது.

கொரோனா 2-வது அலை

அதன் பிறகு கொரோனா வைரஸ் பரவல் குறைய தொடங்கியதால், கோவிலில் திருமணம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் 50 திருமணங்கள் மட்டுமே நடத்த ஆன்லைன் மூலமாக பதிவு செய்யப்பட்டு, திருமணங்களுக்கு அனுமதித்து வந்தனர்.
இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா 2-வது அலை உருவாகி மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால் கடலூர் மாவட்டத்தில் தினசரி நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அனுமதி இல்லை

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி மண்டபங்களில் நடைபெறும் திருமணத்தில் 100 பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். கோவில்களில் நடைபெறும் திருமணத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்தது.
அதன் காரணமாக திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் நிர்வாகத்திற்கு உட்பட்ட திருமண கூடத்தில் வருகிற 30-ந் தேதி வரை தற்காலிகமாக திருமணம் நடத்த அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தமிழக அரசு கட்டுப்பாட்டில் ஏதேனும் தளர்வுகள் அறிவித்தால் மட்டுமே திருமணம் நடத்துவதற்கு உயர் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, நடவடிக்கை எடுக்கப்படும் என கோவில் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

Next Story