உக்கடம் பெரியகுளம் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது


உக்கடம் பெரியகுளம் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது
x
தினத்தந்தி 16 April 2021 2:16 AM IST (Updated: 16 April 2021 2:16 AM IST)
t-max-icont-min-icon

உக்கடம் பெரியகுளம் தடுப்புச்சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது.

கோவை

உக்கடம் பெரியகுளம் தடுப்புச்சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது.

கோவையை குளிர்வித்த மழை

கோவையில் கடந்த 2 மாதங்களாக சுட்டெரிக்கும் வெயில் அடித்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் பாதிப்படைந்தனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பழ ஜூஸ், தர்பூசணி, கம்பங்கூழ் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் அதிகமாக சாப்பிட்டனர். 

இந்த நிலையில் வளிமண்டல சுழற்சி காரணமாக கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

அதன்படி நேற்று முன்தினம் மதியம் முதல் கோவையில் வெயிலின் தாக்கம் குறைந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை நேரத்தில் பெய்ய தொடங்கிய மழை இரவு முழுவதும் நீடித்தது. இதனால் கோவையில் நிலவிய வெப்பம் தணிந்து குளிர்ந்த காலநிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தடுப்பு சுவர் இடிந்தது

இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் உக்கடம் குளக்கரையை சுற்றி அமைக்கப்பட்டிருந்த தடுப்புச்சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது. அதன் அருகே வீடுகள் எதுவும் இல்லாததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

 இதைத்தொடர்ந்து இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்றது. 
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது,
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை உக்கடம் பெரியகுளம் 4.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.62 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு வருகிறது. 

இதில் குளம் மேம்படுத்தப்பட்டு, நடைபாதை, சிறுவர்கள் விளையாட உபகரணங்கள், படகுத்துறை, நிழற்கூரை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த குளத்தின் ஒருபகுதியில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டு உள்ளது. இதில் சேரன்நகர் பகுதியில் உள்ள 50 மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்ட  தடுப்புசுவர் மழை காரணமாக இடிந்து உள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story